யாழ் இந்துக்கல்லுாரியில் 9ம் தர மாணவர்களை அறை ஒன்றுக்குள் கொண்டு சென்று கடுமையாக தாக்குதல்?


யாழ் இந்துக்கல்லுாரியில் மாணவ முதல்வர்கள் மற்றும் பாடசாலையை விட்டு அகன்ற மாணவர்கள் சேர்ந்து இன்று 9ம் தர மாணவர்களை அறை ஒன்றுக்குள் கொண்டு சென்று கடுமையாகத் தாக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கால்களில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் மாணவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். பிரபல வைத்தியர் ஒருவரின் மகனும் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ் இந்து கல்லுாரி அதிபர் கடமை விடயமாக கொழும்பு சென்ற சமயத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தரம் 9 மாணவர்கள் என்ன காரணத்துக்காக தாக்கப்பட்டார்கள் என்பது இன்னும் வெளியாகவில்லை.

இதே வேளை சில வருடங்களாக மாணவ முதல்வர்களுக்கான அறைக்குள் பொல்லுகள் பிரம்புகள் தொடர்ந்து காணப்படுவதாகவும் இவற்றை வைத்து மாணவர்களை மாணவ முதல்வர்கள் சில காலமாக தாக்கி வந்ததாகவும் இன்று தெரியவந்துள்ளது. இன்று பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பாடசாலை விட்டும் வெளியே வராததால் அவர்களைத் தேடி உள்ளே சென்ற பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் உருவானதாகத் தெரியவருகின்றது.

யாழில் சிறுவர் தினங்களை கொண்டாடுபவர்கள் தமது பகட்டுக்காகவே இவற்றை கொண்டாடிவிட்டு சிறுவர்கள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காது இருக்கின்றார்கள் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு கொள்வதில்லை எனவும் கல்விச் சமூகப் போராளியாக உள்ள வடக்கு மாகாண கல்விச் செயலாளர் இளங்கோவன் அவர்களும் இவ்வாறான சம்பவங்களை கண்டும் காணாது விடப்போகின்றாரா?? எனவும் பெற்றோர்கள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நல்லுார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குறித்த பாடசாலையில் நடந்த இந்த சம்பவத்துக்கு பிரதேசசெயலகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றத எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement