கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் சந்தேகம்!


கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் திருகோணமலை கடற்படை வதை முகாமில் வைத்து, எம்.பி. 5 ரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான இறுதி முடிவினை எட்டுவதற்காக வைத்திய பகுப்பாய்வு மற்றும் இரசாயன ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க வழங்கியுள்ளார்.

குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விசேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.