வவுனியாவில் பல்கலை மாணவர் ஒருவரை காணவில்லை!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஓருவர் காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால், அவரது பெற்றோர் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

இந்நிலையில், அவர் சென்றதாக தெரிவிக்கப்படும் காட்டுப் பகுதியில் இளைஞர்கள் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் நேற்று இரவு 11 மணிவரையில் அவரை கண்டறிய முடியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்தும் அவரை தேடும் நடவடிக்கையில் இளைஞர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவனான 23 வயதான பாலசுப்பிரமணியம் தர்மிலன் என்ற இளைஞரே காணாமல்போயுள்ளார்.