Home யாழ் செய்தி யுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன் –...

யுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன் – சந்திரிகா யாழில் உருக்கம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை தன்னால் நேரடியாக உணர்ந்துகொள்ள முடியுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

அத்தோடு, 50 வருட பாதிப்புகளை ஒருபோதும் 5 வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சுனாமி தாக்கத்திற்குப் பின்னர், யாழில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கியிருந்தார்கள்.

எனினும் எமது ஜனாதிபதி காலம் நிறைவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த அரசாங்கம், அபிவிருத்திகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, யுத்தத்தை மட்டும் மேற்கொண்டனர்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் 2015ஆம் ஆண்டுவரை மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் யாழிற்கான எந்தவொரு அபிவிருத்திகளையும் செய்யவில்லை.

2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பல்வேறு செயற்பாடுகளை இங்கு முன்னெடுத்தோம்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். எஞ்சியுள்ள காணிகளை விரைவில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல், ஆயிரக்கணக்கான வீடுகளையும் நிர்மாணித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளோம்.

இந்த செயற்பாடுகளை நாம் எதிர்காலத்திலும் சிறப்பாக முன்னெடுப்போம். நானும், இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான்.

எனது தந்தை மற்றும் கணவரை நான் இதனால்தான் இழந்தேன். எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவிக்கும் வேதனையை நான் நன்கு உணர்வேன்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்த செயற்பாடுகள் இன்னும் போதாது என்பதே உண்மையாகும்.

50 வருட பாதிப்புக்களை ஒருபோதும் 5 வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியாது. இந்த அரசாங்கத்தில் குறைகள் உள்ளமை உண்மைதான்” என மேலும் தெரிவித்தா்.