யாழ்.மாவட்டத்தில் சுதந்திரமாகவும், நடுநிலையான தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

யாழ்.மாவட்டத்தில் சுதந்திரமாகவும், நடுநிலையான தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே மக்கள் அச்சமின்றி தாம் விரும்பிய நபருக்கு வாக்களிக்க முடியுமென்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான என். வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாவட்டத்தில் தேர்தலிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 126 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் 89 ஆயிரத்து 538 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

யாழ். மாவட்டத்தில் 531 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட தேர்தல் தொகுதியில் 631 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீவகப் பகுதியில் 9 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன. 71 வலயங்களாக பிரிக்கப்பட்டு அதற்குரிய தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தான் வாக்கெண்ணும் பணிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் விநியோகம் செய்யப்படவுள்ளன. 33 வாக்கெண்ணும் நிலையங்களும், 11 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைக்காக 7200 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இம்முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் குற்றங்களாக 40 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில், அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போன்று இம்முறையும், சுமூகமான முறையில் சுதந்திரமாகவும், நடுநிலையாகவும் தேர்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச் சீட்டுக்கள் நீளமாக இருப்பதனால், வாக்களிப்பு நேரம் அதிகமாகும் என்ற காரணத்தினால், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிகமாக வாக்குப் பெட்டிகளும் வாக்களிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தாமதங்கள் ஏற்படாதவாறு வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். நாளை காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள், வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்” என தெரிவித்தார்.