16ஆம் திகதி ஜனநாயகக் கடமையை அனைவரும் சரிவர நிறைவேற்றுங்கள்!

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்குரிமையுள்ள சகலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என சிவில் அமைப்புக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

அந்தவளையில், “ஜனநாயக ஆட்சி என்பது மக்களின் வாக்குகளிலிருந்துதான் ஆரம்பமாகின்றது. எனவே, வாக்குரிமையைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டியது மக்களின் சமூகப் பொறுப்பு” என்று‘மலையக உரிமைக் குரல்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வஜன வாக்குரிமை மூலம் மக்கள் இறைமையைப் பாதுகாக்கப்படுவதற்கான அதிகாரம் மக்களுக்கு உரித்தாகின்றது. ஆகவே, அந்த உரிமையை உரிய வகையில் பயன்படுத்துமாறு கோரி மேற்படி அமைப்பால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்ற ஜனாதிபதித் தேர்தல் இம்மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

இறுதிநேரம்வரை காத்திருக்காது, நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு வாக்களர்களிடம் கோரிக்கை விடுப்பதுடன், வாக்களிப்பு நிலையம் செல்வதற்கு முன்னர், வாக்களிப்பதற்கு தேவையானஆவணங்கள் கைவசம் உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே, அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமான முறையில், மனசாட்சியின் பிரகாரம் வாக்களிக்கலாம். அந்த உரிமையை பறிப்பதற்கு எவராவது முயற்சித்தால் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிடுங்கள்.

அதேவேளை, தொழிலுக்காக கொழும்பு உட்பட ஏனைய பகுதிகளில் வாழும் மலையக மக்களுக்கு, வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக விடுமுறையை வழங்குமாறு தொழில் வழங்குநர்களிடம் கோரிக்கை விடுப்பதுடன், அத்தகையை ஏற்பாட்டை செய்துகொடுப்பதற்கு முன்வந்தவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன், தேர்தல் சட்ட திட்டங்களை மீறாது, வன்முறைகளில் ஈடுபடாது, நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.