தமிழ் மக்களை சிங்கள மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை!

ஜனாதிபதித் தேர்தல் என்பதைப் பார்க்கும் போது சிங்கள பேரினவாதத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பது போன்ற தேர்தலாகவே தென்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

அதாவது தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற எவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாது என்றளவுக்கு தென்பகுதி நிலைமையுள்ளது.

இவ்வாறான நிலைமைக்கு சிங்களப் பேரினவாதிகளின் விதைப்புகளே காரணமெனலாம். தமிழ் மக்கள் சிங்களவர்களின் எதிரிகள் என்பது போன்ற சித்திரிப்புகள் சிங்கள மக்களிடம் ஆழப்பதிந்து விட்டது.

Advertisement

இதனால் அவர்கள் தமிழ் மக்களை தங்களின் எதிரிகளாகவே பார்க்கின்றனர். இதன் காரணமாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைக்கூட தமிழ் மக்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது என்ற கோணத்தில் பார்க்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது.

உண்மையில் சிங்களத் தரப்பினால் மிகப் பெரும் உயிரிழப்புகளையும் சொத்து இழப்புக்களையும் சந்தித்தவர்கள் தமிழர்கள். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக சிங்கள மக்கள் இரங்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோசத்தை சிங்கள மக்களே எழுப்ப வேண்டும்.

ஆனால் அவ்வாறான தர்மம் எதுவும் தென்பகுதியில் தென்படவில்லை. மாறாக சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு உரிமை வழங்குவது இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்கும். பெளத்த சிங்களத்துக்கு ஆபத்தைத் தரும் என்ற கருத்து நிலையே தென்பகுதியில் காணப்படுகிறது.

இதன்காரணமாக இலங்கை மண்ணில் இன ஒற்றுமை என்பது இன்னமும் சாத்தியப்படாத விடயமாகவே இருந்து வருகிறது. கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகள் தமிழினத்தை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் வாழ்வியல் பின்தங்கியுள்ளமையும் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமையும் அடிப்படை வசதிகள் அற்ற நிலைமையும் தமிழினத்தை தவிக்க வைக்கிறது.

இருந்தும் தமிழினத்தின் வீழ்ச்சியைப் புறந்தள்ளி இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்துகின்ற முயற்சியில் சிங்களத் தரப்புகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

ஒரு நாட்டுக்குள் ஓர் இனம் பொருளாதாரத்தில் பின்தங்கி நிற்கின்ற நிலையில் – அடிமைப்பட்டிருக்கின்ற நிலையில், அதுபற்றிச் சிந்திக்காமல் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முற்படுகின்ற மடமைத்தனத்துக்குள் இருக்கின்ற இனவாதம் எத்துணை கொடியது என்பதை உணர்வது கடினமன்று.

எதுஎவ்வாறாயினும் இந்த நாட்டின் எழுச்சி என்பது தமிழ் இனத்தின் எழுச்சியில் தங்கியுள்ளதென்ற உண்மையை தென்பகுதி மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

நன்றி வலம்புரி