தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க நாம் தயார்!

தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டயிம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை சுதந்திரமடைந்தது முதல் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப்பகிர்வு குறித்தே பேசியதாகவும் மாறாக அவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை எனவும் கூறினார்.

ஊடகவியலாளர் : 13 ஆவது அரசியல் அமைப்பு திட்டம் 1987 ஆம் ஆண்டுக்குரியது. அப்போது வேறுப்பட்ட யுகம் ஒன்று காணப்பட்டது. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி 13 தொடர்பில் பேசுகின்றார்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : இலங்கை அரசியல் அமைப்பில் தற்போதும் 13 ஆவது திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள பல பிரிவுகளை எம்மால் நடைமுறைப்படுத்த முடியாது.

ஆகவே எமக்கு சில மாற்றங்கள் தேவை.

இது குறித்து தமிழ் அரசியல் தலைவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சுதந்திரமடைந்தது முதல் அவர்கள் அதிகார பகிர்வு குறித்தே பேசுகின்றனர்.

ஆனால் அந்த பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

குறிப்பாக மீன்பிடி தொழிலில் உள்ள பிரச்சினைகள், கைத்தொழிலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கே நாம் தீர்வை வழங்க எதிர்பார்கின்றேன். மற்றைய விடயங்கள் குறித்து பேசப்பட்டு வருகின்றது.

முன்னைய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு சட்டமூலம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்தது. பெரும்பான்மை மக்களின் இணக்கம் இன்றி எந்தவொரு தீர்வையும் வழங்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மக்களிடத்தில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய விடயங்களை முன்வைத்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதுவே யதார்த்தம். பெரும்பான்மை மக்களை தெளிவுப்படுத்தினால் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட போவதில்லை.

அனைவருக்கும் சம உரிமை வழங்குதல் மற்றும் அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பனவும் அதில் அடங்கும். ஆனால் துர்திஸ்டவசமாக தமிழ் அரசியல்வாதிகள் ஒரே விடயத்தை மாத்திரமே கூறி வருகின்றனர்.

எந்த நோக்கமும் இல்லாமல் அவர்கள் நாடு சுதந்திரமடைந்தது முதல் அதிகார பகிர்வு குறித்தே பேசுகின்றனர். எனவே அவர்கள் யாதார்த்தவாதிகளாக மக்களின் தேவைகளை அறிந்தே செயற்பட வேண்டும். அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாட தயார்.

ஊடகவியலாளர் : இந்தியாவுக்கு வருகைதந்த போது உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திய வைகோ உள்ளிட்ட மற்றைய நபர்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : எனக்கு அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் மக்களின் நலன் குறித்து பார்ப்பதில்லை. வீதி தடைகளை ஏற்படுத்தாமல் எமக்கு உதவிபுரிய வேண்டும். யாதார்த்தவாதிகளாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.