சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஒரு பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 18 இந்தியர்கள் பலி!

சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஒரு பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 18 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள பீங்கான் தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட ஒரு பெரிய குண்டுவெடிப்பில் குறைந்தது 18 இந்திய தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலரும் படுகாயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்து தூதரக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்ததாவது: “சூடானின் தலைநகர் கார்ட்டூமின் பஹ்ரி பகுதியில் உள்ள” சலூமி “என்ற பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு பெரிய குண்டுவெடிப்பு பற்றிய சோகமான செய்தி சமீபத்தில் கிடைத்தது.

சில இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள், மற்றவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

“தூதரக பிரதிநிதி அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். 24 மணிநேர அவசர உதவி எண் + 249-921917471 அமைக்கப்பட்டுள்ளது. தூதரகம் சமூக ஊடகங்களிலும் சம்பவம் குறித்த தகவல்களை வெளியிடுகிறது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நாங்கள் பிராத்தனை செய்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை விபத்து நிகழ்ந்த நேரத்தில் ‘சீலா’ என்ற பீங்கான் தொழிற்சாலையில் 50 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வந்ததாக கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

“சமீபத்திய அறிக்கைகளின்படி, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், 18 பேர் இறந்துவிட்டனர்.”

“காணாமல் போனவர்களில் சிலர் இறந்தவர்களின் பட்டியலில் இருக்கலாம். உடல்கள் எரிந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கின்றது.

அல் அமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு இந்தியர்களை தூதரகம் பட்டியலிட்டுள்ளது, இதில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் மூன்று பேர் அடங்குவர்.

16 இந்தியர்களைக் காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் 34 இந்தியர்கள் விபத்தில் இருந்து தப்பியதாக ஒரு பட்டியல் தெரிவித்துள்ளது.

இந்தியர்களில் பெரும்பாலோர் பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.