கந்தளாய் பகுதியில் மலசல கூடமொன்றில் இரத்தம் வடிந்த நிலையில் 52 வயதுடைய முதியவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மலசல கூடமொன்றினுள் இரத்தம் வடிந்த நிலையில் சடலம் ஒன்றினை இன்று மாலை மீட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருநுவர பகுதியைச் சேர்ந்த செல்டன் திஸாநாயக்க 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு இறந்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கந்தளாய் பகுதியில் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக தொழில் மேற்கொண்டு நகரில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாகவும், சடலத்தில் தலை, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இது கொலையா அல்லது மலசல கூடத்தினுள் விழுந்துள்ளாரா என்ற வகையில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

சடலம் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டதை அயலவர்கள் கண்டு கந்தளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.