பிரியங்கரவுக்கு எதிரான தீர்ப்பு அரசியல் நோக்கமுடையது

புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோ குறித்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்ற ஒழுங்கு அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோவிற்கு எதிராக நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய, இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணைகள், பிரிகேடியர் பெர்ணான்டோவின் இராஜதந்திர விடுபாட்டுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை, லண்டனில் தேர்தல் வேளையில் தீர்ப்பு வெளியாகியுள்ளமை, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றவேளை வழக்கு தொடுநரின் ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை ஏந்தியவாறு நீதிமன்ற வழக்குகளின்போது அடாத்தான விதத்தில், அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டமை, வழக்கு தொடுநரினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய விபரங்கள் பகிரங்கமாகியமை போன்ற சம்பவங்கள் இது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்தியுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தபோதும் இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்

எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.