சீமான்தான் நாட்டுக்கு கேடு தர்பார் இசை வெளியீட்டில் லாரன்ஸ் அதிரடி!

தர்பார்’ இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, ரஜினி எதிர்ப்பாளர்களையும், சீமானையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் லாரன்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நேற்று (7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் லாரன்ஸ் பேசும் போது, ரஜினியின் அரசியல் வருகையை எதிர்ப்பவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், மறைமுகமாக தன்னுடையப் பேச்சில் சீமானையும் சாடினார்.

இது தொடர்பாக லாரன்ஸ் தன்னுடைய பேச்சில் கூறியதாவது:

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ஒரு மேடையில் அறிவித்தார். அந்த மேடையில் மற்றவர்களைப் புகழ வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஸ்டாலின் சார் தொடங்கி இன்னொருவர், அவர் பெயரைச் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. அந்த மேடையில் இதர அரசியல் தலைவர்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை. அவர் இரண்டு வார்த்தைப் பேசினாலே, அது தான் அன்றைய செய்தியாக இருக்கிறது.

அனைவரும் அரசியல் பேசுகிறார்கள். ரஜினி சாருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள். அவர் வரட்டும் பார்த்துக்கலாம். அவருக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள். அதை அவர் நடக்கும் போதே பார்த்துக் கொள்ளலாம். 96ம் ஆண்டு வந்திருந்தால் ந்னறாக இருந்திருக்கும் என்கிறார்கள். அவருக்கு அப்போது விரும்பவில்லை. இந்த வயதில் அவருக்குப் பணம், புகழ் வேண்டுமா?. பலரும் அவரை வீட்டில் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

பலருமே பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்கிறார்கள். பப்ளிசிட்டிக்கு பெயரே சூப்பர் ஸ்டார் தான். அவருக்குப் பணம், புகழ் எல்லாம் தேவையில்லை. இந்த மேடையில் கூட குடும்பத்தினரை முதல் வரிசையில் உட்கார வைக்கலாம். ஆனால், இரண்டாம் வரிசையில் உட்கார வைத்த ஒரே தலைவர் ரஜினி மட்டுமே. இந்த வயதில் ஏன் அரசியலுக்கு வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதி ஐயா மறைந்த போது, கடுமையாகப் போராடி இடம் வாங்கினார் ஸ்டாலின் சார். அப்போது அவர் கண்கலங்கியது, அதைப் பார்க்கும் போது ஸ்டாலின் சார் ஒருமுறை முதல்வராக வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அது தான் ரஜினி சார் ரசிகனின் மனது, அவர் அனைவரையும் வாழ்த்துவார். எடப்பாடி ஐயா எப்படி முதல்வர் என்று நினைத்தேன். பின்பு உடனுக்குடன் வேலை செய்வதைப் பார்த்து மகிழ்ந்தேன். இவர்கள் எல்லாம் தவறாக அரசியல் பண்ணுவதில்லை, மேடையில் நாகரீகம் இல்லாமல் பேசுவதில்லை. அவர்களுடைய உழைப்பில் ஒவ்வொருவரும் நன்றாக வந்துள்ளார்கள்.

ஆனால், அரசியலில் ஒரு சிலர் நாகரீகமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ரஜினி சாரிடம் பதவிக் கேட்கவில்லை, இந்த மேடைக்குப் பேச்சுக்குப் பிறகு ரஜினி சார் என்னிடம் பேசாமல் இருந்தால் கூட கவலைப்பட மாட்டேன். அரசியல் தலைவர்கள் பலரும் நாகரீகமாகப் பேசுகிறார்கள். ஒரு தலைவர் மட்டும் தான் அநாகரீகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தான் இந்த நாட்டுக்கே கேடு எனச் சொல்வேன். அரசியலிலேயே அது தவறான விஷயம். அது பெரிய ஆபத்து.

ரஜினி சாரைப் பேசி அதன் மூலம் வரும் விளம்பரத்தால் தான் வாழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என் தலைவரின் மேடையில் யாரையும் திட்டிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. இங்குச் சிலர் அரசியலுக்கு யார் வந்தாலும் தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் ரஜினி சாரை பற்றி யாராவது தவறாகப் பேசினால், நான் திரும்பப் பேசுவேன். அரசியலை அரசியலாகப் பேசுங்கள்.

இங்கு என்னோட உணர்ச்சியை அடக்க முடியாமல் பேசிவிட்டேன். எனக்கு அரசியல் ஒன்றுமே தெரியாது. அரசியலில் நான் ஜீரோ. தயவுசெய்து மறுபடியும் என்னைச் சீண்டி கற்றுக் கொள்ள வைத்துவிடாதீர்கள்.

இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.

லாரன்ஸ் தன்னுடைய பேச்சில் பெயர் சொல்ல விரும்பாதது மற்றும் இறுதியில் சீண்ட வேண்டாம் என்று கூறியது சீமானைத் தான் என்கிறார்கள். ஏனென்றால், சமீபத்தில் சீமான் தரப்புக்கும், லாரன்ஸுக்கும் பிரச்சினை உண்டானது. இறுதியில் இருவருமே சமரசம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.