வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்க தடை!

டெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 550 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த பிராந்திய சுகாதார திணைக்களத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அந்தவகையில், தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறும் பிராந்திய சுகாதார திணைக்களத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மூடப்பட்டன.

இதனால் மாணவர்கள் பலரும் தனியார் வகுப்புக்களுக்கு வந்து மீண்டும் வீடு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.