ஊடகவியலாளர்,மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல்!

சட்டவிரோதமான கள் வியாபாரத்தை செய்தியறிக்கை மூலம் வெளிப்படுத்திய ஊடகவியலாளர் துஷித குமார டி சில்வா மற்றும் அவரது மனைவி மீது நேற்றிரவு அளுத்கமை – ஹெட்டிமுல்ல பகுதியில் அவர்களது வீட்டுக்கு அருகில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோத கள் வியாபாரம் தொடர்பில் செய்தி வழங்குவதை நிறுத்துமாறு குண்டர் குழு கோரியது. இந்நிலையில் குறித்த குழு முன்னதாக ஊடகவியலாளரின் வீட்டுக்குள் நுழைந்து மகனை அச்சுறுத்தி, வீட்டுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலை கேள்விப்பட்டு வீட்டுக்கு திரும்பிய டி சில்வா மற்றும் மனைவியை வழி மறித்த நபர் ஒருவர் அவர்களை தாக்கிவிட்டு, கைபேசி மற்றும் பணப்பை என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த ஊடகவியலாளர் இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் கடந்த வாரம் சட்டவிரோத போத்தில் கள் வியாபாரம் தொடர்பில் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.