மூடிய அறைகளுக்குள் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை…யாழில் சரோஜா சிவச்சந்திரன் பகீர் குற்றச்சாட்டு!

மூடிய அறைக்குள் இருக்கின்ற உயர் அதிகாரிகள்கூட பெண்கள் மீதான துர்நடத்தைகளில் (துஷ்பிரயோகங்கள்) ஈடுபடுகின்றனர். பாடசாலைகள், முறைசாரா கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களிலும் பெண் பிள்ளைகள் மீதான துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன”

இவ்வாறு யாழ்ப்பாணம் பெண்கள் அபிவிருத்திக்கான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement

“பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு” தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

பெண்கள் மீதான துர்நடத்தை என்றவுடன் இளைஞர்கள் அல்லது வீதியில் செல்லும் திரிபவர்கள்தான் இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் நாம் சாதாரணமாக நினைப்பதுண்டு. அப்படியல்ல, மூடிய அறைக்குள் இருக்கின்ற உயர் அதிகாரிகள்கூட பெண்கள் மீதான துர்நடத்தைகளில் (துஷ்பிரயோகங்கள்) ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று பாடசாலைகளிலே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது அனைவரும் அறிந்ததே. முறைசாராக் கல்வி நிறுவனங்கள், முறைசாரா தொழில் நிறுவனங்களிலும் இவ்வாறான பிரச்சினைகளை பெண் பிள்ளைகள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கடைகளில் வேலை செய்கின்ற பெண்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு உள்ளது என்பது தெரியாது.

நாட்டில் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கான பாதுகாப்பு என்ற சட்ட ஏற்பாடு ஒன்று உள்ளது. ஆனால் அந்தச் சட்ட ஏற்பாடு என்ன நிலையில் உள்ளது என்பது தெரியாது.

வேலை நேரத்துக்கு மேலதிகமாக பெண்கள் கடைகளில் பணி புரிந்தாலும் அவர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு கிடைப்பதில்லை. வேலை முடிந்து தனியாக வீடு திரும்பும் போது, அவர்கள் பாதையிலேயே பல சம்பவங்களை எதிர்நோக்க நேரிடும். அவ்வாறான பிரச்சினைகள் இந்த நாட்டில் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட ஏற்பாட்டால் கிடைக்கின்றதா?

இவ்வாறான சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்காமல் வன்முறைகள் ஏற்படுவதை நாம் தடுக்கலாம். பாலியல் வன்புணர்வு மற்றும் துர்நடத்தை இன்று பெண்களுக்கு மட்டுமல்ல ஆண் சிறுவர்களுக்கும் ஏற்படுகின்றது.

சுற்றுலாத்துறையின் காரணமாக எமது நாட்டிலே பல விடுதிகள் வந்துவிட்டன. இந்த விடுதிகளிலே என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் பெண்கள் சார்ந்த நிறுவனங்கள் ஏதாவது ஒரு ஆய்வை முன்னெடுத்துள்ளீர்களா? இதனைக்கூட நாம் செய்யவில்லை.

நாம் ஒருமுறை ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று அங்கு கலாசார சீரழி இடம்பெறுவதாகக் கேட்டோம். அங்கு இளைஞர்கள் இளம் பெண்களை அழைத்து வந்த போது, ஹோட்டல் முகாமைத்துவம் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எந்தவொரு அடையாளப்படுத்தல் பதிவையும் முன்னெடுக்காமல் அறைகளில் தங்க அனுமதித்துள்ளனர் என்பதை நாம் கண்டறிந்தோம்.

இவ்வாறான நிலமைகள் துர்நடத்தைக்குரிய சந்தர்ப்பங்களை இலகுபடுத்துகின்றன. அதனால் பெரியளவிலான விளைவுகள் எம்மைப் பின்தொடர்கின்றன. சட்டங்களும் அவர்களுடைய செயலை இலகுவாக்குகின்றது. இதனால்தான் பிறந்த சிசுவை வீதியில் எறிவது – சிசுவை உயிருடன் புதைப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

எனவே பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்குப் பின்னால் பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் சரியாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தற்போது ஒரு பெண் பிள்ளை எவரையும் நம்பி விட்டுச் செல்லமுடியாத நிலையில் எமது சமூகம் இருக்கின்றது. அண்ணனை நம்பிவிட்டுட்டு போக முடியாது, அப்பா, பேரன், அயலவர் என எவரையும் நம்பி பெண்ணை தனியாக விட்டுவிட்டுச் செல்ல முடியாது. அப்படியான நிலை அல்ல. ஆனால் இந்தப் பயம் எமக்கு வந்துவிட்டது என்றார்.