சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் பதற்றம்!

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் சில நிமிடங்களில் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் வேடிக்கை பார்த்ததுடன், அவர்களை உள்ளேவிட்டு பிரதான வாயிலையும் மூட மறுத்தனர் எனத் தெரிவித்து மாணவர்கள் குழப்பமடைந்ததகாக தெரிவிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறப்பு அதிரடிப் படையினர் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களிலும் பொலிஸார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் துரத்தி வந்தனர்.

இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர்.

எனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

எனினும் பிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெருமளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் பிரதான வாயிலில் கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் பதற்றமாக சூழல் காணப்பட்டது.

இதேவேளை, பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.