வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் மனைவி, தீ வைத்து எரித்துக்கொலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் மனைவி, தீ வைத்து எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான நடராஜன் (60) என்பவரது முதல் மனைவி இந்திரா (56). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றினை வைத்துக்கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இருவருக்கும் இடையே குழந்தை பிறக்காத காரணத்தால், நடராஜன் லீலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நடராஜன் தன்னுடைய இரண்டாவது மனைவியை பார்ப்பதற்காக நேற்றைக்கு முன்தினம் காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

பின்னர் நேற்று காலை 11 மணியளவில், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியபோது, பாதி உடல் எரிந்த நிலையில் இந்திரா உயிரிழந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், ரத்தக்காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்த இந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சில தடயங்களை கைப்பற்றியுள்ளனர்.