மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஆயுதமுனையில் கொள்ளை!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளையில் ஆயுதமுனையில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

ஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியகல்லாறு ஆலையடிப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவத்தில் 7 பேரிடமிருந்து சுமார் 6 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

ஆயுதம் தரித்த இருவர் பிரதான வீதியில் நின்றுகொண்டு, வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இவ்விதம் 5 வாகனங்கள் கொள்ளையர்களால் மறிக்கப்பட்ட நிலையில் அந்த வாகனங்களிலிருந்த மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், ஏனைய தொழில்களுக்காக கையில் ரொக்கப் பணத்துடன் சென்ற 7 பேரிடம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் பொலிஸார், உயர்மட்ட உத்தரவுகளின் பேரில் தீவிர தேடுதல், கண்காணிப்பு மற்றும் புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.