Home யாழ் செய்தி யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோல்வியில்!

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோல்வியில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் வரவு – செலவுத் திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டாலும் மேயரின் அதிகாரத்துக்கு அமைவாக குறித்த வரவு – செலவுத் திட்டம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது என யாழ்ப்பாணம் மாநகர மேஜர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் விசேட அமர்வு மாநகர மேயர் தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய விசேட அமர்பில் 43 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 19 உறுப்பினர்களும், எதிராக 24 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

யாழ். மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற 28ஆம் திகதி முதலாவது வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

அதன்போது வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 உறுப்பினர்களும், எதிராக 21 உறுப்பினர்களும் வாக்களித்த அதேவேளை 7 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் மாநகர சட்டத்தின் பிரகாரம் வரவு – செலவுத் திட்டத்தை மீண்டும் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற மேயரின் கருத்துக்கு அமைவாக இன்று வரவு – செலவுத் திட்டம் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.

இன்றைய சபை அமர்பின்போது உறுப்பினர்களிடையே கருத்து மோதல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.