தமிழ் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேசிய கீத விவகாரம்

2016 ஆண்டு முதலே சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்த ஆண்டு மீண்டும் அது கைவிடப்படும். நாட்டில் ஒரே ஒரு தேசிய கீதம் மட்டுமே உள்ளது. இது அரசாங்க முடிவு” என அண்மையில் பொது நிர்வாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூறினார்.

ஆயினும், இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பதிரண கூறியிருந்தார். அத்தோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை நிறுத்துவது தொடர்பாக அரசாங்கம் உறுதியான முடிவை எடுத்துள்ளதாக தான் நம்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

அமைச்சர் தென்னகோன் தலைமையில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக இந்த வார ஆரம்பத்தில் ஆராயப்பட்டது. இந்த நிகழ்வின் முடிவில் தமிழில் தேசிய கீதம் பாடும் கடந்த அரசாங்கத்தின் நடைமுறையை தற்போதைய அரசாங்கம் அகற்றும் என்று அவர் கூறினார்.

Advertisement

1949ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அன்று சுதந்திர சதுக்கத்தில் கூட தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழில் பாடப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தேசிய கீதம் இரண்டு மொழிகளில் பாடப்பட வேண்டும் என்று இதன் அர்த்தமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு சுதந்திர தினம் போன்ற ஒரு முக்கிய அரச நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடுவதை நிறுத்துவதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவு ஏற்படும் என்ற கருத்தையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் குறித்த அறிவிப்பின் பின்னர் எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1949 இல் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர், தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு முதல் முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கீழ் மீண்டும் கடைபிடிக்கப்பட்டது.

ஆனால் அன்றுகூட தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையை அடுத்து பல்வேறு சர்ச்சை உருவாகியது. குறிப்பாக இந்த முடிவை எதிர்த்து மூன்று பேர் அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தனர்.

மேலும், மனுதாரர்கள் சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்டு இந்த மனுக்கள் சட்டமா அதிபரின் தலையீடு காரணமாக, அப்போதைய தலைமை நீதிபதி பிரியசாத் டெப், நீதிபதி கே.டி. சித்ரசிரி மற்றும் மறைந்த நீதிபதி பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் முன்னிலையில் அந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோதும் குறித்த மனுக்களை தொடர்ந்தும் விசாரிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர். அத்தோடு தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையையும் ஆதரித்தனர்.

அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது பிரிவுகள் சிங்கள மற்றும் தமிழ் இரண்டையும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாகவும் தேசிய மொழிகளாகவும் அங்கீகரிக்கின்றன என்றும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அரசியலமைப்பை மீறவில்லை என்றும் சட்டமா அதிபர் இந்த வழக்கின்போது வாதிட்டார்.

இந்நிலையில் 72ஆவது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு தடை விதிக்கப்படுமா என்ற முடிவு தற்சமயம் உறுதியாகவில்லை என்றே கூறலாம். குறிப்பாக இதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில அமைச்சர்களும்கூட அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, “அரசாங்கம் இதைச் செய்தால் மட்டுமே சமூகங்களுக்கு இடையில் பிளவு ஏற்படும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்ததைப் போலவே இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடுவதற்கு அவர்கள் உறுதியளிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமையினால் சில ஆண்டுகளாக சுதந்திர தின நிகழ்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தபோதும் கடந்த 2016 ல் மட்டுமே மீண்டும் கலந்துகொள்ளத் தொடங்கியது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை இத்தகைய நடவடிக்கைகள் “தேசிய ஒற்றுமையை பலவீனப்படுத்தும்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார். மேலும் இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுடன் இந்த முடிவை மாற்றியமைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களுடன் இந்த விடயம் தொடர்பாக நிச்சயம் விவாதிப்பேன் என்றும் முந்தைய ஆட்சி பின்பற்றிய நடைமுறையைத் தொடர்வதில் தவறில்லை.” என்றும் சுட்டிக்காட்டினார்.

இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடுவதனால் அனைத்து சமூகங்களிடையேயும் ஒரு விதமான உணர்வைத் தருகிறது. எனவே தமிழ் மக்களின் மகிழ்ச்சியை ஏன் கொள்ளையடிக்க வேண்டும்? என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் இதுவரை இந்த விவகாரம் பற்றி விவாதிக்கவில்லை. நாங்கள் முன்பு ஒருபோதும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை, ஆனால் நல்லிணக்கத்திற்கான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதால் 2016 இல் நிகழ்வில் கலந்துகொண்டோம். தமிழில் பாடப்படும் என்று நாங்கள் கேட்கும் வரைகூட எங்களுக்குத் தெரியாது” என கூறினார்.

அத்தோடு “ஆட்சியாளர்கள் நாங்கள் தேசிய கீதம் பாடுவதை விரும்பவில்லை என்றால், நாங்கள் பாடாமல் இருப்போம் என்றும். தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்பது தமிழ்ரக் தெசியகீதத்தை பாடாதீர்கள் என்று அவர்கள் கூறவருவதாக உணர்வதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.

எனினும் இந்த விடயம் குறித்து அரசாங்கம் இதுவரையில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இதுவரையில் எந்தவிதமான கருத்துக்களையும் நேரடியாக வெளியிடவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசியக் கீதம் பாடப்படுமா அல்லது சிங்களத்தில் மாத்திரம்தான் பாடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

செய்தி ஆசிரியர் ஜெயச்சந்திரன் விதுஷன்