Home உள்ளூர் செய்தி தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் பயமாம் – ஸ்ரீசுபத்திரராம விகாராதிபதி

தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் பயமாம் – ஸ்ரீசுபத்திரராம விகாராதிபதி

வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தி கொடுக்கும் வரை அமைதியாக இருக்கப்போவதில்லை என கல்முனை ஸ்ரீசுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக மதத்தலைவர் என்ற ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம் இருந்தேன்.

ஆனால் இன்று தங்களது பெயரை அரசியலுக்காக உட்புகுத்தி இந்த பிரதேசத்தில் சிலர் உலா வருகின்றனர். அவர்களுக்கு இந்த புனித நாளில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். மரணத்தை தழுவும் வரை பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தருவதற்காக பாடுபடுவேன்.

இந்த மண்ணில் பிறந்த அத்தனை மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் அதிகாரம் இருக்கிறது கௌரவம் இருக்கிறது என்பதை நீங்கள் சிறிதளவும் எண்ணக்கூடாது தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது.

அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்.

அதைத் தவிர தமிழ் மக்கள் பற்றி எவருக்கும் கவலைப்படுவதில்லை. மாறாக அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் நீங்கள் தான் அவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.

தமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் பயம். நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.