யாழில் பெருமளவான படையினர் குவிப்பு!

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தற்போது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், நள்ளிரவில் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் நேற்றைய தினம் இரவு இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, நள்ளிரவு குறித்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அப்பகுதியை பெருமளவிலான இராணுவத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் வாகனத்திற்கு வழி விடவில்லை என கூறி நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சில இளைஞர்களுடன் இராணுவத்தினர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அவ் இளைஞர்கள் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது இரு தரப்பையும் சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடத்திவருவதாக தெரியவருகின்றது