எமது மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலே வாழ்கிறார்கள்!

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை வெளிக்கொணர்வதில் எமது மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி பல்லவராயன்கட்டு சிறிமுருகன் விளையாட்டு கழகத்தின் தைத்திருநாள் நிகழ்வுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Advertisement

தமிழ்த்தேசிய இனம் இந்த பூமிப்பந்திலே மிகப்பெரும் வரலாற்று அடையாளங்களை கொண்டவர்கள் இந்த சிறிமுருகன் விளையாட்டு கழக மைதானம் எவ்வாறு யாருடைய பெயரால் உருவாக்கப்பட்டது என்பதை மக்கள் கூறுவதற்கு அச்சம் கொள்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி முதல் லெப் கேணல் மன்னர் மாவட்ட தளபதி விக்டர் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டது. இவற்றை எல்லாம் வெளியே சொல்ல முடியாதவர்களாகவே தொடர்ந்தும் இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்பதனூடாகவே எமது இலட்சியத்தை அடைய முடியும். இந்த தைத்திருநாளில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க உறுதி பூண வேண்டும் எனவும், இந்த தைத்திருநாளனது கொண்டாடப்படும் பண்டிகைகளில்

தமிழர் திருநாள் என அடையாளப் படுத்தப்படிருப்பதுடன் மதச்சார்பற்ற பண்டிகையாக இருப்பதுடன் இந்த உலகை இயக்கும் சூரியன் என்ற மிகப்பெரிய சக்தி மூலத்தை கௌரவிக்கும் தினமாக வழி, வழியாக நாம் கொண்டாடும் ‘உழவர் பெருநாளாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயக்காந்தன், கேதீஸ்வரன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பல்லவராயன் கிராமத்தில் பிறந்து கல்வி பயின்றவர்களான சட்டத்தரணி பெ.சிவசாந்தி, பொறியியலாளர் துளசிகன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்