போர்க்குற்றவாளிகளுக்கு பதவி உயர்வு குறித்து ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் செய்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாகவும் உள்நாட்டு விசாரணைகளை வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கிய பொறிமுறை ஊடாக முன்னெடுக்க தவறியமை தொடர்பாகவும் தம்மால், சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை செய்ய வலியுறுத்தப்படுமென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

புதிய ஜனதிபதி தன்னுடைய நடவடிக்கைகளில், பொருளாதார ரீதியாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என சொல்லப்படுகின்ற போதிலும், இன ரீதியாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட பலருக்கு பதவி உயர்வுகளையும் வாய்ப்புகளையும் வழங்கி வருவதையிட்டு தாங்கள் மிகவும் கவலையடைவதாகவும் கூறினார்.

ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஏறெடுத்தும் பார்க்கவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், இந்த நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில், இனப்படுகொலைக்கு எதிரான குற்றங்களை உள்நாட்டு விசாரணைகளை வெளிநாட்டு நீதிகள் தலைமையில் விசாரணை செய்வதற்காக ஒப்புக்கொண்டதை, நான்கரை ஆண்டுகள் கழித்தும் செய்ய மறுத்து வருவதைச் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனவும், சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.