ரிஷாத் மனைவியிடமும் சி.ஐ.டி. விசாரணை?

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது மனைவியான கே.எம்.ஏ.ஆய்ஷா ஆகியோரிடம் விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ச.தொ.ச.நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கல்கிஸ்ஸை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போதே இவ்விடயம் தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் மனைவியிடமும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் மனைவிக்குச் சொந்தமான வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள ச.தொ.ச.நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள், கடந்த 52 நாள் அரசாங்கத்தின் காலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தவையாகும் என்று குற்றபுலனாய்வு திணைக்களம், நீதவான் மொஹமட் மிஹாலுக்கு நேற்று அறிவித்தது.

எனவே ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது மனைவியான கே.எம்.ஏ.ஆய்ஷா ஆகியோரிடம் விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையையும் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.