இங்கிலாந்திற்கு எதிரான துடுப்பாட்ட போட்டிகள் யாவும் இடைநிறுத்தம்

கோவிட் -19 தொற்று நோயின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான இலங்கையின் பயிற்சிப்போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இரு அணிகளுக்கிடையிலான தொடர், பிற்காலத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற புரிதலின் அடிப்படையில் இத்தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி காலியில் நடைபெறவிருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியின் நடுப்பகுதியில் இருந்தபோது, இந்த செய்தி வந்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவிட் -19 தொற்றுநோய் உலகளவில் மோசமடைந்து வருவதாலும், இலங்கை கிரிக்கெட்டுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் இன்று எங்கள் வீரர்களை இங்கிலாந்துக்கு திருப்பி, இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளது.

இதேவேளை இங்கிலாந்து கிரிக்கெட் சபை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘இலங்கையில் உள்ள எங்கள் அணிகளுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே இரவில் நடந்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, தொடரை ஒத்திவைத்து வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடரை மறுபரிசீலனை செய்வதே எங்கள் நோக்கம்’ என கூறினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வருவதற்கு முன்னதாகவே இலங்கை அணி வீரர்களுடன் கை குலுக்க மாட்டோம், இரசிகர்களுடன் செல்பி எடுக்க மாட்டோம் போன்ற பல்வேறு நிபந்தனைகளுடனேயே இலங்கைக்கு வந்தது.

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணி, இலங்கை வந்தது.

இதில் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்திலும், இரண்டாவது போட்டி 27ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.