இலங்கையில் கொரோனோ தொற்று 65 தாண்டியது!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 10 மணி வரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும்,​ கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் 243 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலையாக இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட வெலிகந்த ஆதார வைத்தியசாலை சுகாதார பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுளளது

தற்போது 17 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2463 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் புது டில்லியில் இருந்து இலங்கை வந்த யாத்ரீகர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தம்பதிவ யாத்திரைக்கு சென்று இந்தியாவில் தங்கியிருக்கும் ஏனையோரையும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்றில் அவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.