தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 22-ந்தேதி இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவும் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் ‘கொரோனா’ என்று பெயர் சூட்டினார். உலகம் முழுவதும் வைரலான இந்த வைரசின் பெயரை கொண்ட குழந்தை, உத்தரபிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது.

குழந்தைக்கு ‘கொரோனா’ என்று அந்த கொலைகார வைரசின் பெயரையா சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடமும், குழந்தையின் பெற்றோரிடமும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், “கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகிறது. இருப்பினும், மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்த குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவளாக இருப்பாள்” என்று பதில் அளித்தனர்.