கொரோனா அச்சுறுத்தலால் இருக்கும் மக்களுக்காக பெரும் தொகையை உதவியாக வழங்கிய ரஜினிகாந்த்!

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கி உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். திரைப்பட பணிகள் நின்று போனதால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பெப்சியில் உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில் 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தியவர்கள் என்றும், இவர்கள் வேலை இழப்பால் கஷ்டப்படுகின்றனர் என்றும், அவர்களுக்கு நடிகர்கள்-நடிகைகள் உதவ வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். இதுபோல் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர். சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவி வழங்கி இருக்கிறார்கள்.

நடிகர் பார்த்திபன் 250 மூடை அரிசி வழங்கி உள்ளார். ஒவ்வொரு மூடையும் 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலா 10 மூடை அரிசி வழங்கி உள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூடை அரிசி வழங்கி உள்ளார்.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இன்றி கஷ்டப்படும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று நடிகர் சங்க தனி அதிகாரி கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே முடங்கி உள்ளது. படப்பிடிப்பு தடையால் நடிகர் சங்க உறுப்பினர்களில் துணை நடிகர்-நடிகைகள், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நாடக நடிகர்கள் மற்றும் மாதந்தோறும் உதவி தொகை பெறும் மூத்த கலைஞர்கள் தினசரி வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே அவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நமது சங்கத்தை சேர்ந்த மனித நேய பண்பாளர்கள் நடிகர் சங்க வங்கிக்கணக்கில் தங்களால் இயன்ற நிதி வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த வேண்டுகோளை ஏற்று, வேல்ஸ் பல்கலைக்கழக தலைவரும், தயாரிப்பாளரும், நடிகர் சங்க உறுப்பினருமான ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். இந்த தொகையை நடிகர் சங்க வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார்.

அவர் கூறும்போது, கொரோனாவால் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ நிதி திரட்ட வேண்டும் என்று தனி அதிகாரியிடம் நான் வற்புறுத்தியதற்கு இணங்க, அவரும் நிதி வழங்கக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நான் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளேன் என்றார்.