கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 42,000 பேர் – புலனாய்வுத்துறை

கொரோனா வைரசினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட 166 நோயாளர்களுடன் தொடர்புடைய 42,000 பேர் இலங்கையில் உள்ளனர். அவர்களை உடனடியாக பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெறும் சோதனை வேகம் மிக மந்த கதியில் அமைந்துள்ளது என்பதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் நவீன் டி சொய்சா நேற்று (5) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரிக்கும் வரையா காத்திருக்கிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

“நாங்கள் பயன்படுத்தும் தற்போதைய முறை பி.சி.ஆர் சோதனை முறையாகும். இது நீண்ட நேரத்தை எடுக்கிறது. ஒரேவிதமான பரிசோதனை முறையை மட்டும் தொடர்வது நல்லதல்ல.

அத்தோடு கோவிட் 19 தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு கொரோனா தொற்று இல்லை என அத்தாட்சிப்பத்திரம் கொடுத்து வீடுகளுக்கு அனுப்பிய இருவர் தற்போது நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் சோதனை செய்ய வேண்டும் எனும் நிலைக்கு வந்துள்ளோம்.

எங்கள் தற்போதைய சோதனை திறன் நாளொன்றுக்கு 750 ஆக இருக்கிறது. அதை 1500 ஆக அதிகரித்து வருகிறோம். இந்த திறனை மதிப்பிட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு நேற்றைய தினம் கூடியது. தற்போது நாளொன்றுக்கு 300 வரையான சோதனைகளே நடந்து வருவது இந்த சந்திப்பில் தெரிய வந்தது.

நாடு முழுவதும் கண்டறியப்பட்ட 166 கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 42,000 பேர் நாடு முழுவதுமுள்ளனர். ஜனாதிபதியுடன் நேற்று நடந்த சந்திப்பில், புலனாய்வுத்துறையினரால் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தகவல் தெரிய வந்தது.

நாங்கள் சோதனை வேகத்தை அதிகரிக்க வேண்டும். நாளொன்றுக்கு 1000, 1500 சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 1000 சோதனை செய்தாலே, புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளவர்களை சோதனை செய்து முடிக்க 42 நாள் ஆகிவிடும்.

ஆனால் இப்போது Rapid test எனும் விரைவான புதிய சோதனை முறை ஒன்று உள்ளது. நேற்று ஜனாதிபதியுடனான சந்திப்பில், இந்த விரைவான சோதனையை சுமார் ஒரு வாரம் செய்ய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது. இதுவரை, இந்த தொழில்நுட்பக் குழு அந்த குறிப்பிட்ட சோதனை முறையை செய்ய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த விரைவான சோதனைக்கு வழக்கமாக சுமார் 15 நிமிடங்கள் எடுக்கும். 1000 ரூபா அளவிலான குறைவாக செலவாகும். மற்ற சோதனைக்கு சுமார் 6,000 ரூபாய் செலவாகிறது. எங்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால், இதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இது இன்னும் நடக்கவில்லை. கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் தொகை 27,000 ஆக இருந்த போதே சோதனை செய்யும்படி கூறினோம். இப்போது இது 42,000 உயர்ந்துள்ளது. இந்த தொகை 1 – 2 இலட்சம் ஆகும் வரையா சோதனை செய்யாமல் இருக்கிறீர்கள்?.

சோதனை செய்த பின்னர் கூட கொரோனா தொற்று இல்லாதவர்கள் என தெரிந்த போதும் உடனடியாக வீட்டிற்கு அனுப்புமாறு நாங்கள் கேட்கவில்லை. எதிர்மறைகளை மீண்டும் மீண்டும் சோதிக்கலாம். அல்லது 14 அல்லது 21 நாட்களின் பின்னரும் எதிர்மறையாக இருந்தால் வீடுகளுக்கு அனுப்பலாம். “தொழில்நுட்பக் குழுவின் உடனடி முடிவின் மூலம், இந்த செயல்முறை நாளை முதல் செயல்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.