எங்கள் வீட்டை மிருகக்காட்சி சாலை போல பார்க்கின்றனர் – இந்தியாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

இந்தியா ஆயிரக்கணக்கான மக்களை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தியுள்ளது.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளிற்கு வெளியே அறிவுறுத்தல்களை ஒட்டுவது, தனிப்பட்ட விடயங்களை வெளியிடுவது போன்ற மக்களை வீடுகளிற்குள் இருக்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என பிபிசியின் இந்திய செய்தியாளர் விகாஸ் பான்டே தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் பாரத் டிங்கிராவின் ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் மார்ச்22 ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனனர்.

Advertisement

அவர்களின் உறவினர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்ததன் காரணமாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவருக்கும் நோய் அறிகுறிகள் இல்லை என்ற போதிலும் குடும்பத்தவர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றனர்.

அதிகாரிகள் அந்த வீட்டின் வாசலின் முன்னாள் இந்த வீட்டிற்கு செல்லவேண்டாம் இந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்ற அறிவுறுத்தலை ஒட்டிச்சென்றுள்ளனர்.

இந்த அறிவுறுத்தல்கள் மக்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றச்செய்வதை நோக்கமாக கொண்டவை,ஆனால் ஏற்கனவே விதிமுறைகளை இருக்கமாக பின்பற்றும் அந்த குடும்பத்தினரிற்கு இதனால் தேவையற்ற மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

எங்கள் வீடு ஒரு மிருகக்காட்சி சாலை போல மாறிவிட்டது என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்,மக்கள் எங்கள் வீட்டை கடந்து போகும்போது படமெடுக்கின்றனர்,நாங்கள் ஒரு சில நிமிடங்கள் பல்கனிக்கு வந்தால் கூட எங்கள் அயலவர்கள் எங்களை உள்ளே போகுமாறு தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளின் முன்னால் அறிவுறுத்தல்கள் ஒட்டப்படுவதன் முக்கியத்துவம் எங்களிற்கு தெரியும்,அரசாங்க அதிகாரிகள் எங்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்கின்றனர் ஆனால் மக்களின் நடவடிக்கைகள் எங்களை காயப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது எங்கள் குடும்பத்தின் அந்தரங்கத்தினை பாதிக்கின்றது என அவர் தெரிவித்தார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது தற்பாதுகாப்பு நடவடிக்கை என்பதை மக்கள் உணரவேண்டும்,இதன் அர்த்தம் நாங்கள் நோயினால் தாக்கப்பட்டுள்ளோம் என்பதல்ல,ஒருவேளை நாங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் இவ்வாறு அவமானப்படுத்தவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த பலர் பிபிசிக்கு இவ்வாறான அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

புதுடில்லியின் நொய்டாவில் வசிக்கும் தம்பதியினர் தங்கள் வீடு பலரிற்கு பேய் வீடாக பயங்கரமானதாக மாறியுள்ளது என குறிப்பிட்டனர்.

நாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நேரடியாக தனிமைப்படுத்தலிற்கு சென்றோம் ஆனால் நாங்கள் சமூகத்தினால் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவோம் என நாங்கள் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொலைபேசி மூலம் ஆறுதல் செய்தி அல்லது குறுஞ்செய்தியையே எதிர்பார்த்தோம் ஆனால் அனைவரும் எங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர்,நாங்கள் பல்கனிக்கு சென்றால் கூட அது அவர்களின் கண்ணில் படுகின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாங்கள் எவரையும் சந்திக்கவில்லை நாங்கள் இவ்வாறு நடத்தப்படுவது கவலையளிக்கின்றது என்கின்றனர் அவர்கள்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த குல்ஜீட் சிங் என்பவரும் இதே நெருக்கடியை சந்தித்துள்ளார்,

அவர் இந்தி பாடகி கனிகா கபூரை சந்தித்தவர், கபூர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றது இதனால் எனது குடும்பம் கடும் அழுத்தங்களிற்கு உள்ளானது என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து வகையான வதந்திகளும் பரவத்தொடங்கி நான் இரத்த வாந்தி எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாக தொடங்கின என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் அச்சமடைந்துள்ளனர் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்புகின்றனர் என்கின்றார் அவர்.

எனது தனிமைப்படுத்தல் முடிவிற்கு வந்துள்ளது ஆனால் என் மீது விழுந்த கறை தொடரும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

காய்கறி பால் விற்பவர்கள் கூட எங்கள் வீட்டிற்கு வர மறுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.