தமிழக்தில் பார்வையற்ற முதியவர் மயங்கிய மனைவியுடன் கால்வயிறு கஞ்சிக்கு யாராவது உதவுங்களேன் கதறி அழுத கொடூரம்!

ராமநாதபுரத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பார்வையற்ற முதியவர் மயங்கிய மனைவியுடன் கால்வயிறு கஞ்சிக்கு யாராவது உதவுங்களேன் என கையேந்தி புதன்கிழமை கேட்டது கல் நெஞ்சையும் கறையச்செய்வதாக இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே நடமாடி வருகிறார்கள். கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் கூலி வேலை செய்வோர் உள்ளிட்டோர் வருவாய் இன்றி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் சாலைத் தெரு, பேருந்து நிலையம், மருத்துவமனை, வழிவிடுமுருகன் கோயில், ரயில் நிலையப் பகுதி மற்றும கேணிக்கரை என பல பகுதிகளில் ஏராளமானோர் தினமும் பிச்சை எடுத்து வருவாய் ஈட்டி வயிற்றைக் கழுவி வந்தனர். தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் அவர்களுக்கு வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சியில் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (75). இவரது மனைவி முத்தம்மாள் (70). தம்பதிகளான இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்த வேலு, குருவி பிடித்தும் விற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 5 ஆண்டு முன்பு திடீரென பார்வை மங்கியுள்ளது. பின்னர் முற்றிலும் பார்வை தெரியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

பார்வை தெரியாததால் வேலைக்குச் செல்லமுடியாத நிலையில் மனைவியின் உதவியுடன் சாலையோரத்தில் நின்று பிச்சை எடுத்து அதன்மூலம் அன்றாட உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சாலைத் தெருவில் பிச்சை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர் வசிக்கும் பகுதியிலேயே இருந்துள்ளார். ஆனால், ஊரடங்கு நீடித்த நிலையில், மக்கள் நடமாட்டம் உள்ள காலை நேரத்தில் மட்டும் பிச்சை எடுக்கலாம் என மனைவியுடன் சாலைத் தெருவுக்கு புதன்கிழமைகாலை வந்துள்ளார். அவசர கதியில் மக்கள் சென்றதால் யாரும் வேலுவுக்கு பிச்சையிடவில்லை. இதனால், காலையில் சாப்பிடாத நிலையில் முத்தம்மாள் மயங்கிவிட்டார். மனைவி மயங்கியதை கையால் தடவியபடி அறிந்த வேலு சாலையில் சென்றவர்களிடம் கால்வயிறு கஞ்சிக்கு உதவி செய்தால் போதும் மனைவியுடன் வசிப்பிடத்துக்கு சென்றுவிடுவேன் என சத்தம் போட்டு கதறினார்.

அவரது குரலை அடுத்து அங்கிருந்தோர் அவருக்கு உணவு வாங்கி கொடுத்ததுடன், கைச்செலவுக்கும் பணம் கொடுத்து முத்தம்மாளை மயக்கம் தெளிவித்து அனுப்பிவைத்தனர். ராமநாதபுரத்தில் சாலையோரம் திரிந்த 50 க்கும் மேற்பட்டோரை மீட்டு சமூக கூடங்களில் தங்கவைத்து உணவு அளிப்பதாக மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் கூறிவருகிறது.

ஆனால், நகரில் பெரும்பாலான இடங்களில் முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என பலரும் உணவுக்காக ஏங்கி சத்தம்போட்டு கேட்டு வருகின்றனர். ஆகவே அவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தங்குமிடம் வழங்கவும் மாவட்ட, நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.