கொவிட்-19 தேர்தலுக்கான முதலீடா?

கொவிட்-19 உலகை தாக்கிய பொழுது எதேச்சாதிகார பண்பு அதிகம் உடைய அரசுகள் நோய்த்தொற்றை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று ஒரு பொதுவான கருத்துக் காணப்பட்டது.

சீனா எவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்தியது என்று சுட்டிக்காட்டப்பட்டது. சீனா மட்டுமல்லாது வடகொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் உதாரணங்களாகக் காட்டப்பட்டன.

அதேசமயம், ஐரோப்பாவின் ஜனநாயக நாடுகள் கொவிட்-19ஐ எதிர்கொள்ள முடியாமல் திண்டாடின. நோர்வேயில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் சொன்னார் ‘இங்கே ஊரடங்குச் சட்டம் இல்லை, லொக் டவுன்தான். ஆனால் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. மது இல்லையென்றால் இங்கே இவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்’ என்று.

ஆனால், இலங்கைத் தீவில் மதுக் கடைகளைத் திறப்பதற்கு தடை மட்டுமல்லாது கசிப்பு காய்ச்சும் மறைவிடங்களும் சுற்றி வளைக்கப்படுகின்றன. பெருங்குடி மகன்கள் இப்பொழுது இரட்டைத் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

ஐரோப்பிய ஜனநாயகத்தில் ஒரு சமூகத்தை ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வைத்திருக்க முடியாது. லொக் டவுன் என்று சொன்னாலும்கூட அதை எவ்வளவு காலத்துக்கு என்று முன்கூட்டியே அறிவித்த பின்னர்தான் நடைமுறைப்படுத்தலாம். இந்த மாதம் முழுவதும் சிங்கப்பூர் லொக் டவுனை அறிவித்தது. ஆனால் எத்தனையாம் திகதியிலிருந்து எத்தனையாம் திகதி வரை என்பதனை சிங்கப்பூர் அரசாங்கம் தெளிவாக அறிவித்தது.

அதேசமயம், இலங்கைத் தீவில் கொவிட்-19 தொற்றுக்கான வாய்ப்புடையவை என்று சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. எவ்வளவு காலத்துக்கு லொக்டவுன் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எப்பொழுது ஊரடங்கு நீக்கப்படும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதாவது இலங்கை தீவில் கொவிட்-19ஐ எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் முழு அளவிற்கு வெளிப்படையானவை அல்ல என்றே சொல்ல வேண்டும்.

ஜனநாயகப் பண்பு குறைந்த ஒரு நாட்டில் குறிப்பாக படைத்துறையின் செல்வாக்கு அதிகம் உடைய நாடுகளில் எல்லாவற்றையும் இராணுவ இரகசியமாகப் பேணமுடியும். ஆனால் ஜனநாயகப் பண்பு அதிகமுடைய ஒரு சமூகத்தில் அவ்வாறு செய்ய முடியாது. கொவிட்-19ஐ எதிர்கொள்வதில் ஐரோப்பிய சமூகங்களுக்கு இருக்கும் பெரிய சவால் அது.

எனினும் சீனா, வடகொரியா போன்ற ஜனநாயகப் பண்பு குறைந்த நாடுகள் மட்டும்தான் கொவிட்-19ஐ ஒப்பீட்டளவில் விரைவாகக் கட்டுப்படுத்துகின்றன என்பதல்ல. ஜனநாயகப் பண்பு மிக்க நாடுகளான தாய்வான், தென்கொரியா போன்றனவும் அவ்வாறு கொவிட்-19ஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

அதுமட்டுமல்லாது, இலங்கை தீவுக்கு அருகே இருக்கும் இந்தியாவில் குறிப்பாக கேரள மாநிலம் வைரசை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

தாய்வானை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரிக்கக் கூடாது என்று சீனா தடுத்து வருகிறது. எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியின்றியே தாய்வான் கொவிட்-19ஐ வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறது. அதைப்போலவே தென்கொரியாவும். அருகிலிருக்கும் வடகொரியாவோடு ஒப்பிடுகையில் அந்தப் பிராந்தியத்தில் தென்கொரியா ஒரு ஜனநாயக முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. அந்த நாடு கொவிட்-19ஐ எப்படி வேகமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது?

எப்படி என்றால் அவர்கள் இரண்டு முன்னுதாரணங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள். முதலாவது 2015இல் அந்த நாட்டைத் தாக்கிய மேர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு வைரஸிடமிருந்து கிடைத்த அனுபவம். இரண்டாவது சீனாவிடமிருந்து கிடைத்த அனுபவம்.

மேர்ஸ் வைரஸ் இந்தியாவைத் தாக்கியபோது முதலில் அந்த நாடு தயாராக இருக்கவில்லை. அதற்குரிய விலையையும் கொடுத்தது. எனினும் விரைவில் சுதாகரித்துக் கொண்டது. அந்த வைரஸைக் கட்டுப்படுத்திய அனுபவத்தை வைத்து அந்த நாடு கொவிட்-19ஐ எதிர்கொண்டது.

மேலும் கொவிட்-19ஐ எதிர்கொள்வதில் சீனாவுக்கு ஏற்பட்ட சவால்களை தென்கொரியா கற்றுக் கொண்டது. இந்த இரண்டு அனுபவங்களின் தொகுப்பாக தென்கொரியா கொவிட்-19இன் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே காலப்பகுதியில் தொற்றுக்கு உள்ளானவர்களைச் சோதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களை அதிகரித்த அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

அதுபோலவே, முக உறைகளையும் வென்ரிலேற்றர்களையும் அதிகரித்த அளவில் உற்பத்தி செய்தது. குறுகிய நேரத்தில் அதிகளவு நபர்களை சோதிக்கத் தேவையான அளவுக்கு சோதனைக் கருவிகளை அந்த நாடு அதிகரித்த அளவில் உற்பத்தி செய்தது. அதன் விளைவாக மிகக் குறுகிய காலத்தில் அதிக தொகையினரை அங்கே சோதிக்கக் கூடியதாக இருந்தது.

அதுமட்டுமல்ல, சீன முன்னுதாரணத்தை முன்வைத்து ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளைக் கண்டுபிடிக்கும் உத்திகளையும் தென்கொரியா பயன்படுத்தியது. சீனாவின் மேற்படி பொறிமுறை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு உண்டு. தென்கொரியாவிலும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதேபோன்ற உத்திகளை அமெரிக்காவில் பயன்படுத்த முடியவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்படித்தான் தென்கொரியா நோய் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தியது.

இந்தியாவில் கேரள மாநிலமும் தனது முன் அனுபவத்தின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்தது. அங்கேயும் 2018ஆம் ஆண்டு நிபா (Nipah) வைரஸ் தாக்கியது. கேரளாவிலிருந்து மத்திய கிழக்குக்கு வேலைக்குச் செல்பவர்கள் மூலம் அந்த வைரஸ் பரவியது. அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து கேரளா மாநிலம் கொவிட்-19ஐ எதிர்கொண்டது.

தென்கொரியா, கேரளா ஆகிய இரண்டு உதாரணங்களையும் எடுத்துக்கொண்டால் அங்கெல்லாம் மேர்ஸ் வைரஸ், நிபா வைரஸ் ஆகிய இரண்டு வைரஸ்களின் தாக்கத்திலிருந்து பெற்ற முன் அனுபவம் இருந்தது. எல்லாவற்றையும் விட முக்கியமாக அங்கிருந்த அரசுகள் தமது மக்களை நேசித்தன. அது காரணமாகத்தான் முன் அனுபவங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தின.

சிங்கப்பூரிலும் ரஷ்யாவிலும் சீனாவைப் போலவே சந்தேகத்துக்குரிய நோய்த் தோற்றாளர்களை பின்தொடரும் உத்திகள் அதிகம் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டன. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 83 ஆயிரம் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டன. ரஷ்யாவில் ஒவ்வொரு தனி நபருடைய முகத்தையும் ஸ்க்ரீன் செய்து அதன்மூலம் நோய்த் தொற்றை பின்தொடரும் உத்திகளை அந்த நாட்டின் அரசாங்கம் மேற்கொண்டதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால், ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக தன்னை ஒரு மன்னனாக கட்டமைத்து வரும் ரஷ்யத் தலைவர் புடின் தனக்கு எதிராக கிளர்ச்சி செய்யக்கூடிய மக்களை கண்காணிப்பதற்காக ஏற்கனவே உருவாக்கிய இலத்திரனியல் வலையமைப்பைத்தான் கொவிட்-19இற்கு எதிராகவும் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எதுவாயினும், சிங்கப்பூர், ரஷ்யா, சீனா ஆகிய முன்னுதாரணங்களின்படி அங்கெல்லாம் ஜி.பி.எஸ். தொழில்நுட்பமும் ஏனைய பின்தொடரும் தொழில்நுட்பங்களும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு நோய்த்தொற்று ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அதுபோன்ற வழிமுறைகளை ஐரோப்பிய ஜனநாயகத்துக்குள் அதிகரித்த அளவில் பயன்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

எனினும் தாய்வான், தென்கொரியா, கேரள மாநிலம் போன்ற முன்னுதாரணங்களை முன்வைத்து ஜனநாயக பரப்பிற்குள்ளும் ஆட்சியாளர்கள் கொவிட்-19ஐ வெற்றிகரமாகக் கையாள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் ஜனநாயகத் தன்மை மிக்க ஆட்சிப் பரப்புக்குள் கொவிட்-19 போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவது அதிகம் சவால்களுக்குரியதே. ஜனநாயகப் பண்பு குறைந்த அரசாங்கங்கள் ஒப்பீட்டளவில் அதை இலகுவாகச் செய்ய முடியும். ஆனால் நோபல் பரிசை வென்ற பொருளியலாளர் அமர்தியா சென் கூறுவதுபோல அது ஒரு படைநடவடிக்கை மட்டும் அல்லாது அதில் மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.

இந்த முன்னுதாரணங்களின் பின்னணியில் இலங்கை தீவின் நிலைவரத்தை எடுத்துக்கொண்டால் இச்சிறிய தீவு, சீனாவைப் போலவே விரைவாக நோயைக் கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது சாத்தியமே. ஏனெனில் இது ஒரு தீவு. தவிர இங்கு ஆட்சியில் இருப்பது படைத்தரப்புடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் ராஜபக்ஷக்கள். எனவே ஒரு படை நடவடிக்கை போல அவர்கள் நோயை எதிர்கொள்கிறார்கள்.

இதனால், இலங்கை தீவு சீனாவைப் போலவே விரைவாக நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததற்காக பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் ராஜபக்ஷக்கள் கொவிட்-19ஐயும் தமது தேர்தல் வெற்றிக்கான முதலீடாகவே பயன்படுத்துகிறார்களா?

வைரஸின் தாக்கம் குறைகிறதோ இல்லையோ தேர்தலை விரைவாக நடத்தி முடித்து விட அவர்கள் அவசரப்படுவது தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவையே அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள். தேர்தல் வெற்றியை நோக்கியே அவர்களுடைய எல்லா நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்று கருதத்தக்க விதத்தில் தான் கொவிட்-19இற்கு எதிரான அவருடைய பெரும்பாலான நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைகளின் போது அரசாங்கம் மக்களுக்கு உதவி புரிவதாகக் கூறிக்கொண்டு அறிவித்த பல சலுகைகளும் தேர்தல் உள்நோக்கத்தைக் கொண்டவை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

உதாரணமாக, அரசாங்கம் பொருட்களுக்கு விலைகளைக் குறைப்பதன் மூலம் அப்பொருட்களை வியாபாரிகள் பதுக்குமாறு செய்துவிட்டது. ஏற்கனவே மீன்ரின், பருப்பு, முட்டை போன்ற பொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்தது. ஆனால் அரசாங்கம் அறிவித்த விலைக்கு பொருட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில் அதற்கு வேண்டிய மானியம் வியாபாரிகளுக்கு வழங்கப்படவில்லை.

பல இலட்சம் முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. மனிதர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை உயர்வாக வைத்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் மில்லியன் கணக்கான முட்டைகள் அழுகும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.

இப்பொழுது, அரசாங்கம் அரிசிக்கும் விலை அறிவித்திருக்கிறது. இது கடைசியில் கஞ்சிக்கும் வழியில்லாமல் செய்யும் ஒரு வேலைதான் என்று சாதாரண சனங்கள் பயப்படுகிறார்கள். விலைக் குறைப்புச் செய்த அரசாங்கம் அதற்கு வேண்டிய மானியங்களை வழங்கவில்லை. ஊரடங்கை அறிவித்த அரசாங்கம் அதனால் பாதிக்கப்படும் அன்றாட உழைப்பாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை. அதற்கு வேண்டிய பொறிமுறையும் இல்லை. இது எதைக் காட்டுகிறது?

எந்தவித முன்னாயத்தமும் இன்றி அரசாங்கம் கொவிட்-19இற்கு எதிரான ஒரு போரை முன்னெடுக்கிறது. இது அரசாங்கம் நோயைக் கட்டுப்படுத்துவதை விடவும் தேர்தலை அவசரமாக நடத்தி முடிப்பதில்தான் குறியாக இருக்கிறது என்பதை காட்டுகின்றதா?