பெண்ணை விற்க பேஸ்புக் விளம்பரம்!

லெபனானில் ஃபேஸ்புக் மூலம் ”நைஜீரிய பெண் விற்பனைக்கு” என்ற விளம்பரம் சமீபத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு பிறகு இதை பதிவு செய்தவரும் கைது செய்யப்பட்டார். இந்த விளம்பரத்தால் நைஜீரியாவில் பரபரப்பு நிலவுகிறது.

லெபனானில் உள்ள அதிகாரிகள் 30 வயதாகும் அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். தற்போது அந்தப் பெண் நைஜீரிய தூதரகத்தில் பாதுகாப்பாக உள்ளார் என லெபனானின் புலம்பெயர்ந்தோருக்கான ஆணையத்தின் தலைவரான அபிக்கே தப்பிரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஃபேஸ்புக்கில் விற்பனை என்று அறிவிக்கப்பட்ட பெண், எப்படி மீட்கப்பட்டார் என்ற விவரங்களை அபிக்கே தப்பிரி விவரிக்கவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த பெண் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்து, இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக கைது செய்ய முடிந்தது என அபிக்கே தப்பிரி கூறினார்.

வீட்டு வேலைகள் செய்யும் பெண்ணை 1000 டாலர்களுக்கு ஃபேஸ்புக்கில் விற்க முயன்ற நபர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தில் அந்த பெண்ணின் புகைப்படமும் பதிவிடப்பட்டிருந்தது. இதை பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

நைஜீரியா மற்றும் பல ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்டுதோறும் கடத்தப்படுகின்றனர்.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்களை வீட்டு வேலைகள் மேற்கொள்ளும் கொத்தடிமைகளாகவும் கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடவும் தள்ளப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு குவைத்தில் பிபிசி அரபி மொழி செய்தி சேவை மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சந்தைகளில் வீட்டு வேலைகளுக்காக பல பெண் ஊழியர்கள் இணையம் மூலம் விற்கப்படுவது தெரியவந்தது.