கால்பந்து ஜாம்பவான் சுனி கோஸ்வாமி மாரடைப்பால் மரணம்!

இந்திய கால்பந்து உலகில் பிரபலமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் கேப்டனான சுனி கோஸ்வாமி (வயது 82) நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இவரது மனைவி பெயர் பஸந்தி மற்றும் மகன் பெயர் சுதிப்தோ. கடந்த சில நாட்களாக அவருக்கு இருந்த சர்க்கரை வியாதி, நரம்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதயம் நின்று நேற்று மாலை ஐந்து மணி அளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Advertisement

பெங்காலில் உள்ள கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் 1938-ம் ஆண்டு பிறந்த கோஸ்வாமி இளம் வயதிலேயே கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டார்.

மோகன் பகான் கிளப்பில் இணைந்த அவர் அதில் சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார்.

1962-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் சுனி கோஸ்வாமி தலைமையிலான இந்திய கால்பந்து அணி தங்கப்பதக்கத்தை வென்றது, அவரது கால்பந்து வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது.

இவர் கால்பந்து தவிர, கிரிக்கெட்டிலும் திறமைசாலியாக காணப்பட்டார்.

கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக 1962-63-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை ஆடினார்.

மேலும் 1962-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார். விளையாட்டில் அவர் அளித்த சேவையை பாராட்டி மத்திய அரசு 1963-ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1983-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது.

கடந்த ஜனவரி மாதம் அவரது 82-வது பிறந்த நாளையொட்டி தபால்துறை அவரது நினைவு தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது.

சுனி கோஸ்வாமியின் மறைவுக்கு கால்பந்து வீரர்களும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.