மெஸ்சிக்கு கொரோனா பரிசோதனை!

பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டிக்கான பயிற்சி துவங்க வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல விளையாட்டு போட்டிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டி கொரோனா பரவலால் பாதியிலேயே நிற்கிறது.

Advertisement

இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகளை நடத்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் தீவிரம் காட்டி வருகிறது. அனேகமாக அடுத்த மாத தொடக்கத்தில் இந்த போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லா லிகா கால்பந்து போட்டியில் பங்கேற்கும் முன்னணி அணிகளில் ஒன்றான பார்சிலோனா கிளப் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்க ஏற்பாடு செய்துள்ளது.

இதையொட்டி அந்த அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் லயோனல் மெஸ்சி, லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அர்துரோ விடோல் உள்ளிட்டோர் பயிற்சி மையமான சியுடெட் எஸ்போர்டிவாவுக்கு நேற்று வருகை தந்தனர்.

முதலில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரத்தமாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது.

யாருக்கும் எந்த தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் பயிற்சி தொடங்கும். வீரர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு கவசம் அணிந்தபடி, குறைந்தது 2 மீட்டர் இடைவெளிவிட்டு பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.