ஐ.பி.எல். இரத்தானால் 4000 கோடி ரூபா இழப்பு!

2020 அம் ஆண்டு பருவக்காலத்துக்கான 13 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இரத்துச் செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு (பி.சி.சி.ஐ) இந்திய மதிப்பில் 3994.64 கோடி ரூபா இழப்பு ஏற்படும் என பி.சி.சி.ஐ. பொருளாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 13 ஆவது ஐ.பி.எல். தொடர் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பரில் உலக இருபது 20 கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஒருவேளை, இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டால், இவ்வாண்டுக்கான ஐ.பி.எல். தொடரை நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்பட்ட்டிருந்தது.

Advertisement

தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் கிரிக்கெட் எப்போது ஆரம்பமாகும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஒருவேளை ஐ.பி.எல். தொடர் இரத்து செய்யப்பட்டால் 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அருண் துமல் கூறுகையில், ‘‘பி.சி.சி.ஐ. மிகப்பெரிய வருமான இழப்பை எதிர்நோக்கி இருக்கிறது. ஒருவேளை ஐ.பி.எல். போட்டி நடைபெறாவிடில், 3994.64 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கான நேரம் கிடைக்குமா? என்பது எங்களால் உறுதியாகக் கூற முடியாது. எத்தனை போட்டிகளை இழக்கிறோம் என்பதை பொறுத்துதான் சரியான தொகையை கூற முடியும்” என்றார்.