மட்டக்களப்பில் மாடு மேய்க்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய படையினர்!

மட்டக்களப்பு மாவட்டம் வடமுனை ஊத்துச்சேனை மீராண்ட வில் பிரதேசத்தில் மாடு மேய்க்க சென்ற சிலர் விசேட அதிரடிப் படையினரினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று (19) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Advertisement

நேற்று முன்தினம் (18) திங்கள் கிழமையன்று மேற்படி பிரதேசத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, காவல் இருந்த மூவரே தாக்கப்பட்டுள்ளனர்.

அந்த வழியாக ரோந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் அவர்களை அழைத்து அப் பிரதேசத்தினை விட்டு விலகி செல்லுமாறு பணித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மரக் கடத்தல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், தாமும் அவற்றில் ஈடுபடுவதாக தெரிவித்தே அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடு அங்கு அதிகமாக காணப்படும் நிலையில், அவற்றை தடுக்கும் நடவடிக்கையாக அதிரடிப் படையினர் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நீண்ட காலமாக பெரும்பாலான கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளின் மேச்சல் தரையாக மீராண்ட வில் பிரதேசத்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.