சுவிஸில் பணப்பிரச்சனையால் சொந்த சகோதரனை கத்தியால் கொன்ற நபர்!

சுவிட்சர்லாந்தில் பணம் தொடர்பான பிரச்சனையால் இரு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்த விவகாரத்தில் விசாரனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் Bazenheid பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 31 வயது நபர் தமது பெற்றோரின் இல்லத்தில் வைத்து தமது இன்னொரு சகோதரருடன் பணம் தொடர்பான பிரச்சனை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் அந்த 31 வயது நபரை கொலைக்கு தூண்டியுள்ளது. தந்தையின் கண் முன்னே குறித்த நபர் தமது சகோதரரை கத்தியால் கழுத்தில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று அருகாமையில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை தேடியுள்ளார்.

ஆனால் அங்கிருந்து மண்டல மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார்.

தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு உளவியல் தொடர்பிலான பிரச்சனைகள் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பு விசாரணையில் கண்டறிந்துள்ளது.

மட்டுமின்றி, கொல்லப்பட்ட தமது சகோதரரை சிறுவனாக இருக்கும்போது குறித்த நபர் பாலியல் ஆசைக்கும் உட்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த உறவு, அந்த சகோதரருக்கு 7 வயது முதல் 16 வயது வரை தொடர்ந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, கொல்லப்பட்ட தமது சகோதரரை தற்போதும் நேசிப்பதாகவும், அது மறுக்கவே முடியாதது என குறித்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.