ஊரடங்குச் சட்டத்திலும் அடங்காத இளைஞர் யுவதிகள் – ஐஸ் போதைப்பொருளுடன் பிறந்த நாள் விருந்தில் பெண்கள் உற்பட 6 பேர் கைது!

கொரோனா ஊரடங்குச் சட்டத்தின் கீழ் தங்கியிருக்கும் போர்வையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தி பிறந்த நாள் விருந்தை நடத்திய மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரை போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதி கொங்கொடமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அப்போது மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் ஜோடிகளாக இணைந்து ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியவாறு பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

அவர்களிடம் சோதனை நடத்திய பொலிஸார் இரண்டு பெண்களிடன் வசம் இருந்த 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும் மற்றைய பெண்ணிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மூன்று பெண்களில் இரண்டு பேர் கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருந்து சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரிந்து வருவதாக கூறப்படுகிறது.

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் கட்டான கொங்கொடமுல்ல, அனுராதபுரம் நேகம்பஹா, மெனிக்கின்ன வலல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.