கொரோனாவால் சுவிஸ் உணவகங்களில் அதிக கட்டணம் வசூல்!

சுவிஸ் உணவகங்கள் சில உணவு மற்றும் பானங்கள் ஆர்டர் செய்தால் கூடவே சுகாதார உபகட்டணம் வசூலிக்கின்றன.

உணவகத்துறை, கொரோனாவால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கால் கடுமையக பாதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தற்போதும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவேண்டியுள்ளதால் குறைவான வாடிக்கையாளர்களையே உணவகங்களில் அனுமதிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதையடுத்து, உணவக உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொஞ்சம் சரிக்கட்ட முயன்று வருகிறார்கள்.

ஆனால், இது சட்டவிரோதமா என சில வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இது சட்டத்திற்குட்பட்டதுதான், உணவகங்கள் தங்கள் விலைகளை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

ஆனால், வாடிக்கையாளர் உணவை ஆர்டர் செய்வதற்குமுன்பே அவர்கள் இப்படி ஒரு விடயம் உள்ளது என்பதை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

இதில், இன்னொரு விடயத்தையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், உணவகங்கள் தங்கள் பணியாளர்களுக்காகவும் வாடிக்கையாளர்களுக்காகவும் மாஸ்க் மற்றும் கைகளுக்கான கிருமிநாசினியை விலை கொடுத்து வாங்குகின்றன.