ஈரானில் ஒரே நாளில் 3,000 பேர் கொரோனாவால் பாதிப்பு!

ஈரானில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னால் ஒரே நாளில் 3,000 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான நிலையில், நிர்வாகம் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு ஈரான். மரண எண்ணிக்கை பெருமளவு குறைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்தியது.

ஆனால் கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் 2,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி 81 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பதிவாகும் மிக அதிக எண்ணிக்கை இதுவாகும். இதனையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 154,445 எனவும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,878 எனவும் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும், திருமணங்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டாம் என அரசு அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனிடையே, சுகாதார அமைச்சர் சயீத் நமகி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘கொரோனா வைரஸ் முடிந்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்… சில அதிகாரிகளும் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக நம்புகிறார்கள். கொரோனா தாக்கம் முடிந்துவிடவில்லை, அதன் ஆபத்தான தாக்கத்தை நாம் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள நேரிடலாம் என்றார்.