மட்டக்களப்பில் திருமண வீட்டுப் பிரியாணி ஒத்துக்கொள்ளத்தால் 30 பேர் மருத்துவமனையில்!

மட்டக்களப்பு – ஆரையம்பதி, கோயில்குளம் பகுதியில், திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயில்குளம் பகுதியில் திருமண வீடொன்றில் நேற்றிரவு (02) சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி கலந்த பிரியாணியை உணவாக உட்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுள் பெண்களும் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாராதாரப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.