பிரித்தானியாவில் ஜீரோ கார்பன் திட்ட விருதுக்கு தேர்வான இந்திய பெண்கள்!

பிரித்தானியாவில் ஜீரோ கார்பன் திட்ட விருதுக்கு தெரிவான 50 பெண் இன்ஜினியர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐந்து பேர் இடம் பெற்றுள்ளதால், அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரித்தானியாவில் 2020-ஆம் ஆண்டில் சிறப்பு செயல்பாட்டிற்கான விருது பெறும் 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில், ஜீரோ கார்பன் திட்டத்தில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியோர், இந்த விருதுக்கு தெரிவாகி உள்ளனர்.

இந்த பட்டியலில், பிரித்தானியாவின் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியர், சித்ரா சீனிவாசன் இடம் பிடித்து உள்ளார்.

இவருடன், போக்குவரத்து பிரிவில் ரிது கார்க், நில அதிர்வு துறையில் பர்னாலி கோஷ், காலநிலை மாற்ற நிபுணர் அனுஷா ஷா மற்றும் மூத்த இன்ஜினியர் குசும் திரிகா என, ஐந்து இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, சித்ரா சீனிவாசன் கூறுகையில், இந்த சாதனை, மிகவும் ஊக்கமளிக்கிறது. என் சகாக்களின் ஆதரவு இல்லாமல், இது சாத்தியம் இல்லை, என்று கூறியுள்ளார்.