மகிந்தவே மீண்டும் பிரதமர்!

மகிந்த ராஜபக்ஸவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக மன்னாரில் தேர்தல் இணைப்பு அலுவலகத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவித்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் கட்சி சார்பாக எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள புளொட் வேட்பாளர்களின் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் இணைப்பு அலுவலகமானது இன்று காலை 11 மணியளவில் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர் வரும் தேர்தலானது மிகவும் இக்கட்டான சூழ் நிலையில் நடை பெற்று வருகின்றது. இந்த தேர்தல் நடை பெறும் காலப்பகுதியில் கோட்டபாய ராஜபக்ஸவே ஜனாதிபதியாக உள்ளார். அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஸவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்புள்ளது.

இம் முறை தேர்தலில் மிக பெரும்பான்மையில் அவர்கள் வருவார்கள். மூன்றில் இரண்டு பெறும்பான்மையை பற்றி கதைத்தாலும் அவர்கள் 120-130 வரையான ஆசங்களில் வருவதாக நம்புகின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் 19ஆவது திருத்ததை இல்லாமல் செய்வது, அதே நேரத்தில் அவருடைய கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதயன் கம்பின் பொல போன்றவர்கள் 13 ஆம் திருத்த சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள்.

ஆனாலும் இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. இப்படியான சூழலில் தமிழ் பிரதி நிதித்துவத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கில் பல கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தை சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்கு கேட்கின்றார்கள்.

இப்படி இருக்கும் போது அவர்களின் உறவுகள் முலமே வாக்குகளை பிரித்து விடலாம் என்று ஏனையவர்கள் நினைக்கின்றார்கள். எனவே மக்கள் இதை எல்லம் மனதில் வைத்துக் கொண்டும் கடந்த காலத்தை எண்ணி வாக்களிக்க வேண்டும் என சித்தார்தன் மேலும் தெரிவித்தார்.