2021 டி20 உலகக் கோப்பையில் இலங்கை வீரர் லசித் மலிங்கா விளையாடுவாரா?

டி20 உலகக் கோப்பை 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், லசித் மலிங்காவை மீண்டும் ஒரு உலக கோப்பை நிகழ்வில் விளையாடுவதை பார்க்க முடியுமா என்று கிரிக்கெட் ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

107 விக்கெட்டுகளுடன் டி-20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மலிங்க, 20202 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

2021 உலகக் கோப்பையின் போது அவர் 38 வயதை கடந்திருப்பார். மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டியை மீண்டும் வெல்ல உதவிய மலிங்காவுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்தது, அதை தொடர்ந்து செப்டம்பர் 2019ல் நியூசிலாந்திற்கு எதிரான டி-20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவுக்கூரத்தக்கது.

உடற்தகுதி ஒரு பிரச்சினையாக இருக்கும், ஆனால் அவரது திறனில் பிரச்சினை இருக்காது என பிரபல விளையாட்டு இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

கிரிக்கெட் வட்டாரங்களின்படி, லசித் மலிங்கா இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலும் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என கூறுகிறார்கள்

தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ஐ.பி.எல்-க்குப் பிறகு அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.