யாழ் 07ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றிருந்த குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏழாம் இலக்க விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பாக தெரியவந்திருந்தது.

அதன் தொடராக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற மருத்துவமனை விடுதியில் சிகிச்சை பெற்றவர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள் 70 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருந்தவர்களில் இன்பர்சிட்டியைப் பிறப்பிக்கவும் பருத்தித்துறை தும்பளை கணக்கிலாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகுரு என்பவரும் ஒருவர்.

அவர் ஈரல் நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு குறித்த விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருக்கின்றார்.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மறு நாளே சிவகுரு குறித்த விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருந்தபோதிலும் 70 பேர்களில் அவரும் ஒருவராக சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தார். பின்னர் குறித்த நபருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கை வெளியான நிலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டிருந்த போது சிவகுருவும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்கு தொற்று கண்டறியப்படவில்லை என்று அவருடைய பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.