யாழ் சிறைச்சாலையில் இருந்தவர் மரணம் – அவருக்கு கொரோனாவா ?

கடந்த ஜுலை மாதம் 11ஆம் திகதி சட்டவிரோதமாக கடல்வழியாக இலங்கை திரும்பியவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தில் அவர்களிடம் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் சட்டவிரோதமாக அவர்கள் பயணித்தமையால் அவர்களை தொடர்ந்தும் சிறைச்சாலையில் தடுத்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அவர்களில் முரளி என்ற நபர் பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழப்பினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளதுடன் அவருடைய உயிரிழப்புக்கும் கொரோனாப் பாதிப்புக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.