வாக்குகள் சிதறியது போக, தமிழ் தேசியக் கட்சிகளுக்குள்ளும் சிதறலா?

இம்முறை தேர்தல் வாக்காளர்களை மட்டும் சிதறடிக்காது, தமிழ் தேசியக் கட்சிகளையும் கூட அது சிதறடித்திருக்கிறதா?

இரண்டு பெரிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டுக்குள்ளும் உட்கட்சிப் பூசல்கள் வெளிக்கிளம்பியுள்ளன.

இதில், கூட்டமைப்பைப் பொறுத்தவரை தேர்தல்தான் உட்கட்சி பூசல்களுக்கு காரணம் என்று இல்லை. பல ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்துவந்த உட்கட்சிப் பூசல்களே அவை. எடுத்த எடுப்பில் பலரும் சுமந்திரனைக் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மூல காரணம் சம்பந்தர்தான். கட்சிக்கு அவர்தான் தலைவர்.

Advertisement

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு அவர்தான் தலைவர். அப்படி பார்த்தால் இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் எல்லா குழப்பங்களுக்கும் அவர்தான் பொறுப்பு. பெருந்தலைவராக அவர் இருக்கத்தக்கதாக இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்களும் கீழ்மட்டத் தொண்டர்களும் ஆளையாள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஒருவர் மற்றவர் மீது வசையை அள்ளி வீசுகிறார்கள். பகிரங்கமாக ஊடகங்களில் பேட்டிகளை வழங்குகிறார்கள். முகநூலில் அருவருப்பான விதங்களில் மோதிக்கொள்கிறார்கள். இன்னும் என்னவெல்லாமோ செய்கிறார்கள்.

ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்றால் அப்படியெல்லாம் நடக்காது. அல்லது கட்சியைத் தலைவரால் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை என்றே பொருள். சுமந்திரன் கட்சிக்குள் பட்டத்து இளவரசனாக மேலெழுவதற்கு சம்பந்தரின் ஆசீர்வாதமே முதற்காரணம். கட்சியின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் கட்சியின் எதிரிகளை தோற்கடிப்தற்கும் சுமந்திரன் முன்னெடுத்த எல்லா நடவடிக்கைகளையும் சம்பந்தர் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்படித்தான், விக்னேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரன் கட்சிக்குள் குறிப்பாக மாகாண சபைக்குள் ஓரணியைத் திரட்டி விக்னேஸ்வரனை சுற்றிவளைத்த பொழுது சம்பந்தர் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போனபோது சித்தார்த்தனைத் தூது விட்டார். அப்பொழுது சித்தார்த்தனிடம் அவர் சொன்னார் “தமிழரசுக் கட்சியும் தோற்கக்கூடாது விக்கியும் தோற்கக்கூடாது” என்று.

ஆனால், எல்லா விவகாரங்களிலும் அவர் அப்படிக் கடைசி நேரத்தில் தலையிட முடியவில்லை என்பதைத்தான் தேர்தலுக்குப் பின்னும் முன்னும் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் காட்டுகின்றன. இது கட்சியின் மீதான சம்பந்தரின் பிடி தளர்கின்றதா என்ற சந்தேகங்களை எழுப்புகிறது.

சம்பந்தருக்கு வயதாகிவிட்டது. தானாக நடமாட மாட்டார். இந்நிலையில் அவர் ஓய்வு பெறவேண்டும் என்று அவருடைய சொந்த மாவட்டத்திலேயே அவருடைய ஆதரவாளர்கள் மத்தியிலேயே கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. எனினும் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஒப்பீட்டளவில் பெரியது அல்லாத ஒரு வெற்றியையும் பெற்றார்.

கட்சித் தலைமையை தள்ளாத வயதிலும் விடாப்பிடியாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். மாவைக்கும் சுமந்திரன், சிறிதரன் கூட்டுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு சம்பந்தருடைய இயலாமையின் விளைவுதான். அதை முன்கூட்டியே கட்டுப்படுத்தி இருந்திருக்கலாம்.

தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் மத்தியில் இவ்வாறு தனி ஓட்டங்களும் குழு நிலைப்பட்ட ஓட்டங்களும் அதிகரித்து வந்தது சம்பந்தருக்கும் தெரியும். ஆனாலும் அவர் அதைக் கட்டுப்படுத்தவில்லை. அல்லது கட்டுப்படுத்த முடியவில்லை.

பொது அரங்கில் கட்சித் தொண்டர்கள் மோதிக் கொண்டிருந்த பொழுது அவர்களைக் கூப்பிட்டு கட்டுப்படுத்தி இருந்திருக்க வேண்டியது சம்பந்தர்தான். ஏனென்றால் அவர்தான் மூத்த தலைவர். தங்களுக்கிடையே மோதிக்கொண்டிருந்த தொண்டர்களும் அவருடைய சொல்லைத்தான் கேட்கும் ஒரு நிலைமை இருந்தது.

ஆனால், சம்பந்தர் அதைச் செய்யவில்லை. இந்த மோதல்களின் ஒரு உச்சக் கட்டம்தான் வாக்கெண்ணும் நிலையத்தில் ஏற்பட்ட களேபரங்கள் ஆகும். இதுவிடயத்தில் சசிகலாவை அழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கவேண்டியது சம்பந்தர்தான்.

அதுபோலவே, தேர்தலுக்குப் பின்னர் சுமந்திரனும் ஸ்ரீதரனும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை மாவையிடமிருந்து பறிக்க முற்பட்டபோது அதையும் சம்பந்தர் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார். சுமந்திரனுக்கு நெருக்கமான அதேசமயம் மாவைக்கும் நெருக்கமான சில மருத்துவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.

ஆனால், அப்படி ஒரு சந்திப்பை முன்கூட்டியே ஒழுங்கு செய்திருக்க வேண்டியது கட்சித் தலைமைதான். ஒரு மூத்த தலைவராக சம்பந்தர் அதைச் செய்யவில்லை. இது விடயத்தில் கடந்த வார இறுதியில் திருகோணமலையில் நடந்த கூட்டத்தின் பின்னர் மாவை அமைதியானது போலத் தோன்றுகிறது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது ஒருவகை ஒத்திவைக்கும் தந்திரம் என்றே பார்க்கப்படுகிறது.

தோல்வியடைந்த கையோடு பிரச்சினையைக் கிளப்பி நிலைமைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமந்திரன்+சிறிதரன் முயற்சித்தார்கள். எனினும் அந்த முயற்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

மாவை ஒரு பக்கம் போகக் கூடும் என்ற அச்சம் ஒரு காரணம். சம்பந்தரின் தலையீடும் ஒரு காரணம். அல்லது அடுத்த வடமாகாண சபையில் மாவைக்கு முதலமைச்சர் ஆகலாம் என்று கூறி நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம். எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் மாவை போராடத் தயார் இல்லை என்பது.

இப்போதுள்ள நிலவரங்களின்படி மாவைக்கு எதிரான அணி பலவீனமாகக் காணப்படுகிறது. எனினும் சிறீதரனும் சுமந்திரனும் இதைவிடப் பொருத்தமான ஒரு காலத்துக்காக காத்திருப்பதாக தெரிகிறது. எதுவாயினும் இந்த விவகாரத்தில் கூட்டமைப்பின் தலைமையும் சம்பந்தப்பட்டவர்களும் முன்யோசனையுடன் நடந்திருப்பதாகவே தெரிகிறது.

அதேசமயம், மற்றொரு கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் பூசல்கள் வெளிக்கிளம்பியுள்ளன. கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின்படி இப்பூசல்களும் தேர்தலுக்கு முந்தியவைதான்.

விருப்பு வாக்கு என்ற அம்சம் வேட்பாளர்களுக்கு இடையே தனி ஓட்டங்களை ஊக்குவிக்கக் கூடியது. இது கூட்டமைப்புக்குள் அசிங்கமான விதங்களில் வெளிப்பட்டது. முன்னணிக்குள் மணிவண்ணன் தனி ஓட்டம் ஓடியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மணிவண்ணனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய விதம் ஜனநாயகமற்றது என்று அவருடைய ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவரை அழைத்து முதலில் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதன்பின் ஒரு விசாரணைக் குழுவை நியமித்து அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்திருக்க வேண்டும். அதன்பின்னரே மத்திய குழு கூடி இறுதி முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை அங்கே பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு பதியப்படாத அமைப்பு. அந்த அமைப்பின் இதயமாக காணப்படும் தமிழ் காங்கிரஸ்தான் பதியப்பட்ட ஒரு கட்சி. எனவே ஒரு கட்சிக் கட்டமைப்பும் அதற்கு வேண்டிய நிர்வாகப் பொறிமுறையும் முன்னணிக்குள் இல்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

கஜேந்திரகுமார் முன்னணியை ஒரு மக்கள் இயக்கம் என்று அழைக்கிறார். மணிவண்ணன் முன்னணியின் உறுப்பினர் என்றும் கூறுகிறார். உரிய முறைப்படிதான் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

எனினும், இரண்டு தரப்புக்கும் இடையே இடை ஊடாடி சமரச முயற்சிகளை முன்னெடுத்த நபர்கள் கட்சியின் முடிவை தேர்தல் முடிந்த கையோடு அறிவிக்காமல் சற்று ஒத்தி வைக்கலாம் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கட்சித் தலைமை அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

2010இல் கூட்டமைப்பிலிருந்து வெளிவந்தபின் முன்னணி நடந்து முடிந்த தேர்தலில்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஆனால், அந்த வெற்றியின் மகிமையைக் குறைப்பதுபோல அக்கட்சிக்குள்ளும் பூசல்கள் வெளிக் கிளம்பியுள்ளன. இதில் மணிவண்ணன் மட்டும் நீக்கப்படவில்லை. அவருக்கு ஆதரவாக இருந்ததாக கருதப்படுகின்ற அல்லது அவரால் அணிதிரட்டப்பட்டவர்கள் என்று நம்பப்படுகின்ற கட்சியின் மூன்றாம் நான்காம் நிலை தலைவர்களும் சந்தேகப்படுவதாகத் தெரிகிறது.

குறிப்பாக, யாழ். மாநகரசபையில் கட்சியின் பிரதிநிதிகளாக இருக்கும் ஒரு தொகுதியினர் மணிவண்ணனுக்கு ஆதரவாக நிற்பதாகத் தெரிகிறது. எனவே மணிவண்ணனுக்கு எதிரான நடவடிக்கை எனப்படுவது அவருக்கு மட்டும் எதிரானது அல்ல. அவரோடு சேர்த்துப் பார்க்கப்படும் அடுத்தடுத்த கட்ட வளர்ந்துவரும் தலைவர்களுக்கும் எதிரானதாக மாறுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எனினும், இதுவிடயத்தில் முகநூல் பஞ்சாயத்துக்கள் உருப்பெருக்கி காட்டும் மோதல்களை விடவும் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதல் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் நாகரீகமானதாகவே காணப்படுகிறது.

குறிப்பாக, மணிவண்ணன் அமைதியாகவும் நிதானமாகவும் கருத்துக்களை தெரிவிப்பதாக தெரிகிறது. சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் அவர்களை குத்துச்சண்டை களத்துக்குள் இழுத்துக்கொண்டு வர முயற்சிக்கின்றன. எனினும் இது விடயத்தில் கூட்டமைப்பை விடவும் முன்னணி நிதானமாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இந்த விவகாரத்தை தேர்தலுக்கு முன்னரே தீர்க்க முடியாமல் போனமை கட்சியின் கட்டமைப்பு சார் பலவீனம் தான்.

இந்த இரண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளை தவிர்த்துப் பார்த்தால் ஒப்பீட்டளவில் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிதான் அமைதியாகவுள்ளது. ஆனால் அங்கேயும் பிரச்சினைகள் உண்டு. அதுவும் ஒரு பதியப்படாத கூட்டு. அங்கேயும் விக்னேஸ்வரனை மையப்படுத்திதான் எல்லாமே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அங்கேயும் யாப்பின் பிரகாரம் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தலுக்கு சிறிது காலத்துக்கு முன்னதாக கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வேறு சில அமைப்பாளர்களும் கட்சித் தலைமையுடன் முரண்பட்டு கொண்டார்கள். தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை. கட்சிக்குள் பொருத்தமான கட்டமைப்பு சார் பொறுப்புப் பகிர்வு இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மூன்று தமிழ் தேசியக் கட்சிகளிலும் மிக இளைய கட்சி இதுதான். தேர்தலுக்குப் பின்னர் ஒப்பீட்டளவில் குழப்பங்கள் அதிகம் இல்லாத ஒரு கட்சியாக அக்கட்சி மட்டும்தான் காணப்படுகிறது.

இவ்வாறாக தேர்தல் முடிவுகளை அடுத்து இரண்டு தேசிய கட்சிகளுக்குள் வெளிக் கிழம்பியிருக்கும் உள்முரண்பாடுகள் பின்வரும் விடயங்களை உணர்த்துகின்றன.

முதலாவது- ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான தமிழ் அரசியல் அதன் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தன்னை மேலும் செழிப்பூட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டாவது- ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் ஏக தலைமைக்கு பழக்கப்பட்ட ஒரு சமூகம் இணைத் தலைமைகள் அல்லது கூட்டுத் தலைமைகள் போன்ற புதிய பரிணாமத்திற்கு போக வேண்டியிருக்கும் அவசியத்தை இது காட்டுகின்றது.

மூன்றாவது- தமிழ் கட்சிகள் அவற்றின் நிறுவன ரீதியான கட்டமைப்புகளில் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கூட்டமைப்பு இன்று வரையிலும் பதியப்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அப்படித்தான். ஒரு கட்சியாகப் பதியும் போது அதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பும் மேலிருந்து கீழ்நோக்கிய நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அந்த கட்டமைப்புக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

ஆனால், தமிழ் கட்சிகளில் எந்தவொரு கட்சியிடமும் இது தொடர்பாக பொருத்தமான கட்டமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அது 72 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட ஒரு கட்சி. அந்தக் கட்சிக்கு ஒரு யாப்பு உண்டு. நிர்வாகக் கட்டமைப்புக்கள் உண்டு. ஆனால் இப்பொழுது எதுவும் அதற்குரிய புனிதத்தோடு இல்லை.

தென்னிலங்கையில் இரண்டு பெரிய பாரம்பரியாக கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சிதைந்து போய்க் கிடக்கின்றன. ஐ.தே.க. இரண்டு கூறுகளாக உடைந்து கிடக்கிறது. ராஜபக்ஷக்கள் பெற்ற வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

ஸ்ரீ.சு.க. முற்றாகச் சிதைந்து விட்டது. அக்கட்சியைச் சிதைத்து அதன் சிதைவின் மீது ராஜபக்ஷக்கள் பொதுஜன பெரமுன என்று அழைக்கப்படும் தாமரை மொட்டு கட்சியை கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.

எனினும், தென்னிலங்கையில் இரண்டு பெரிய கட்சிகளும் சிதைந்திருக்கும் பின்னணியிலும் புதிதாக தோன்றிய தாமரை மொட்டு கட்சி பெருமளவிற்கு சிங்கள வாக்குகளைத் திரட்டியிருக்கிறது.

ஆனால், அதேசமயம் தமிழ் தரப்பில் வாக்குகள் சிதறி விட்டன. இப்பொழுது கட்சிகளும் சிதறுமா என்ற ஒரு நிலை காணப்படுகிறது. சிங்களத் தரப்பில் பழைய பெருங்கட்சிகள் சிதைந்து போனாலும் சிங்கள மக்கள் யுத்த வெற்றி வாதத்தின் கீழ் பெருந் திரட்சியாக ஓரணியாக நிற்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள்?