லண்டனில் வீடு ஒன்றிலிருந்து கேட்ட சிறுமியின் அலறல் – இலங்கை தமிழ்ப்பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு

லண்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருத்தி அலறும் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர், அங்கு ஐந்து வயது குழந்தையான சாயாகி, இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.

அருகிலேயே வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் சாயாகியின் தாய் சுதா சிவானந்தம் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் கிடக்க, பக்கத்திலேயே பிரட் வெட்டும் கத்தி ஒன்றும் கிடந்துள்ளது.

குழந்தையைக் காப்பாற்ற முடியுமா என்று பார்த்த பக்கத்து வீட்டுப்பெண்ணான Elsa Gonzales(47)ம் அவரது சகோதரி Riza Marfilla (55)ம் குழந்தை அசைவின்றி கிடப்பதைக் கண்டு அவசர உதவியை அழைத்துள்ளனர்.

ஜூன் மாதம் 30ஆம் திகதி Mitcham என்ற பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்கு பொலிசார் வந்தபோது, இரத்த வெள்ளத்தில் சாயாகியும் சுதாவும் கிடப்பதைக் கண்டு அவர்கள் இருவரையும் உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே சாயாகி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை ஒன்றிற்குப் பின் கவலைக்கிடமான நிலையில் சுதா இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது குழந்தை சாயாகியை கொலை செய்ததாக சுதா மீது பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்று ஏற்கனவே பொலிசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.